ஊவாவின் உன்னதப்
தேவாதிதேவர்கள் போற்றிய திருமுருகனை
பாவாணர் பாடித்துதிக்கும் பக்திநகர்
நாவாலும் நயம்பட மனத்தாலும்
பூவாலும் பொற்கரத்தாலும் நாம்
நோகாது நொடிப்பொழுதும் வேலனை
தோதாக வணங்கும் தூயநகர்
வேகாத இருப்பிடமாம் வேல்வாழும்
ஓயாத அருட்கடல் கதிர்காமம்
சித்தர்கள் வாழ்ந்துவளம் பெருக்கி
முத்திபெற்று முருகன்தலத்தினிலே
வித்தாகி முத்தமிழ் சொத்தாகி
இத்தரையின் பக்தி தடயங்களாய்
முத்தாகிமிளிருகின்ற வித்தகரை
தத்தெடுத்து தன்னோடு அரவணைத்த
முத்தமிழ் முருகன் வாழ் கதிர்காமம்....
அரும் தமிழ் சொல்லெடுத்து
அருளிய தமிழ்பாக்களால்
திருமுருகன் திருப்புகழ்பாடி
அருணகிரி அகம் மகிழ்ந்த
திருத்தலம் தேன்கமழும் கதிர்காமம்
கரும்போ கற்கண்டோ கனிரசமோ
கானகத்தேனோயென நாளும்
நம் நாவினிக்கும் நற்புகழ்மாலை
நலம் சேர்க்கும் நற்பதி கதிர்காமம்
கொடியிடையாள் குறவள்ளியோடும்
வடிவரசி தெய்வயானையோடும்
குடிகொண்டு குறிஞ்சிக்குமரவேலும்
ஆடி விழாக்காணும் கதிர்காமம்
நாடிவரும் பக்தருக்கு நாளும்
கோடிவரம் நீ கொடுப்பாய்
தேடிவரும் தொண்டருக்கு
கூடிவந்து துணை கொடுப்பாய்
வாடிவதங்கிவரும் வயோதிபரை
பாடியாடி அரவணைக்கும் ஆறுமுகன்
ஓடி விளையாடும் உயர்நகர் கதிர்காமம்
மருதமரங்கள் தோப்பாகி
மகிழ்வுறவே குளிர்ச்சியூட்டும்
மாணிக்ககங்கையும் இங்கு
மாண்புறவே பிணி தீர்க்கும்
அருமருந்து செடிகொடிகள்
அழகாக கமகமக்கும்
காணிக்கை நிதியமும்
காதலாய் களம் குவியும்
கானகத்தேனகம் கதிர்காமம்
களுவாஞ்சிகுடி K.சுந்தர்