உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபுறமும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும். ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும். ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.
நோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.
1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.
2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.
3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.
4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.
5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவதால் தலைவலி வரலாம்.
6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடையதால் தலைவலி உண்டாகும்.
7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலைவலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.
9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்கவாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.
10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.
மருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.
1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache) 2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension) 3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation) 4. தசைச் சுருக்கம் (Muscle Spasm) 5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache) என மருத்துவர்கள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.
மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.
மருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு
நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.
அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்.