இலங்கையில் கண்ணகி வழிபாடு.



இலங்கையில் கண்ணகி வழிபாடு ஒரு தொன்மை வாய்ந்த நம்பிக்கை வெளிப்பாடாகும்.ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவியான சோழ நாட்டில் பிறந்த கண்ணகி பாண்டி நாட்டில் வீரக் கற்பரசியாகி, சேர நாட்டிலே பத்தினித் தெய்வம் எனப் போற்றப்பட்டுஇலங்கையிலே சிங்கள மக்கள் மத்தியில் பத்தினி தெய்யோ என வணங்கப்பட்டு, இலங்கை மட்டக்களப்பு பிராந்தியத்தில் கண்ணகை அம்மனாக கோவில்கள் கொண்டுள்ளாள்.




சிங்கள மக்கள் வழிபாடு

இரண்டாவது நூற்றாண்டில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கஜபாகு என்கிற மன்னனால் கண்ணகி வழிபாடு சிங்கள மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது என சிங்கள வரலாற்று நூல்களில் ஒன்றான இராஜாவளி என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த அரசனை கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்தன் என சிலப்பதிகாரம் சிறப்பித்துக் கூறுகிறது. கஜபாகு மன்னன் வருடந்தோறும் ஆடி மாதத்தில் பத்தினி தெய்வத்திற்கு விழா எடுப்பித்தான். சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும். அதிலிருந்து இந்த விழா எசல பெரஹர என அழைக்கப்பட்டது.  ஊர்வலமாக வரும் ஆடித் திருவிழா என தமிழில் கூறலாம். இந்த ஊர்வலத்தில் நாத தெய்யோ (சிவன்/விநாயகர்), விஷ்ணு தெய்யோ (திருமால்)கதிர்காம தெய்யோ (முருகன்) தெய்வங்களும் இடம் பெற்றன. மிக பக்தியுடன் இந்த விழா சுமார் 1800 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சிங்கள மன்னர்கள் காலத்துக்குக் காலம் தலைநகரை மாற்றியபோது, பத்தினி விழாவும் அந்தந்த தலைநகரங்களில் நடைபெற்றது.
பதினெட்டாம் நூற்றாண்டில் சீய நாட்டிலிருந்து (தாய்லாந்து) இலங்கைக்கு வந்த புத்த துறவிகளின் விருப்பப்படி விழாவில் புத்தரின் புனித தந்தம் தாங்கிய பேழையும் எடுத்துச் செல்லப்படலாயிற்று. தற்போது இந்த விழா சிங்கள மன்னர்களின் கடைசி தலைநகரமான கண்டி நகரில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது ஒரு புத்த சமய விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் விழாவில் இரண்டாவது ஊர்வலம் நாத தெய்யோ ஆலயத்திலிருந்தும், மூன்றாவது ஊர்வலம் விஷ்ணு தெய்யோ ஆலயத்திலிருந்தும், நான்காவது ஊர்வலம் கதிர்காம தெய்யோ ஆலயத்திலிருந்தும், ஐந்தாவது ஊர்வலம் பத்தினி தெய்யோ ஆலயத்திலிருந்தும் தொடங்குகின்றன. இப்போது பத்தினி தெய்யோ தொற்று நோய்கள், பஞ்சம், வரட்சி ஆகியவற்றிலிருந்து காக்கும் தெய்வமாக சிங்கள மக்கள் மத்தியில் வருணிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் வழிபாடுவடக்கு மாகாணம்

 

இலங்கையில் வட மாகாணத்தில் வற்றாப்பளை என்னும் ஊரில் உள்ள கண்ணகை அம்மன் ஆலயம் புகழ் பெற்றது. இங்கே வைகாசி மாதத்தில் விழா நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் கச்சாய் என்னும் ஊரில் ஒரு கண்ணகை ஆலயம் இருப்பதாக ஒரு தகவல்புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தீவுப்பகுதியிலுள்ள ஒரு கண்ணகி வழிபாட்டுத்தலமாகும். இதைத் தவிர கண்ணகி வழிபாடு வட பகுதியில் வேறு இடங்களில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. வடபகுதியிலிருந்த கண்ணகி ஆலயங்கள் பல, நாவலர் காலத்திலேற்பட்ட சைவ எழுச்சியை அடுத்து, வைதிக வழிபாட்டுக்குட்பட்ட அம்பிகை ஆலயங்களாக மாற்றப்பட்டமை வரலாறு.


தமிழகத்தில் சேரன் செங்குட்டுவன் காலத்தில் சோழ, பாண்டி நாடுகளிலும் கண்ணகி கோவில்களும் வழிபாடும் எழுந்தன. கணவன் இறந்தான் எனக் கேள்வியுற்ற கண்ணகி ஒற்றைச் சிலம்புடன் பாண்டியனுடைய அரண்மனை வாயிலில் நின்றபோது வாயில் காவலர்கள் அவளது தோற்றத்தை கொற்றவை, காளி, துர்க்கை என நினைத்ததாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதுதமிழகத்திலும் கேரளத்திலுமுள்ள, மாரியம்மன் மற்றும் பகவதியம்மன் வழிபாடுகள், கண்ணகி வழிபாடு வைதிக வழிபாட்டுக்குள் உள்ளீர்க்கப்பட்டபின்னர் ஏற்பட்ட வழிபாட்டுமாற்றமாகவே இருக்கவேண்டும்.



கிழக்கிலங்கை

இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு பகுதியில், மட்டக்களப்பு பகுதியிலேயே (மட்டு - அம்பாறை மாவட்டங்கள்) கண்ணகி வழிபாடு பெரும்பாலும் காணப்படுகிறது. இங்கு சைவக் கோவில்கள் பல இருக்கின்ற போதிலும் கண்ணகை அம்மன் கோவில்களே அதிக சிறப்புப் பெற்று விளங்குகின்றன. உடுகுச்சிந்து என்னும் நூலில் மட்டக்களப்பிலுள்ள கண்ணகி கோவில்கள் பற்றி தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் யாழ்ப்பாணத்தில் உள்ள அங்கணாமைக் கடவை கண்ணகி கோவில் பற்றியும் சில பாடல்கள் உள்ளன. இந்த நூலின் பாடல் ஒன்றில் "காமனகர் வாழ்குளக் கண்டியுறை மாதே" (பாடல் 63) எனக் கூறப்பட்டிருப்பதால் கண்டியிலுள்ள கண்ணகி கோவிலும் (பத்தினி தெய்யோ கோவில்) மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றிருந்ததென்று தெரிகிறது.

கண்டிக்கும் மட்டக்களப்புக்கும் இடையே பண்டைய காலத்தில் வாணிபத் தொடர்பு இருந்தது. இதனால் இரு இடங்களையும் இணைக்கும் பழைய வீதி ஒன்று இருந்தது. இந்த வீதி மட்டக்களப்புவிற்குத்தெற்கேஉள்ள காரைதீவுவிலிருந்து, சம்மாந்துறைவீரமுனை ஆகிய ஊர்களினூடாக கண்டிக்கு சென்றது. எனவே கண்ணகி வழிபாடு கண்டியிலிருந்து வீரமுனை வழியாக வந்து மட்டக்களப்பின் பிற ஊர்களுக்குப் பரவியது எனக் கொள்ளலாம்.

மட்டக்களப்பிலே 25 இற்கும் அதிகமான ஊர்களிலே கண்ணகை அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. வீரமுனை, காரைதீவு, தம்பிலுவில் ஆகிய ஊர்களில் கிடைக்கும் சில சான்றுகளால் கண்ணகி வழிபாடு அங்கிருந்தே மற்ற ஊர்களுக்கும் பரவியிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
உடுகுச்சிந்து நூலின் 71 ஆம் பாடல்
பட்டிநகர், தம்பிலுவில், காரைநகர், வீரமுனை
பவிசுபெறு கல்முனை, கல்லாறு, மகிழூர்,
எருவில், செட்டிபாளையம், புதுக் குடியிருப்பு, செல்வ
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை,
அட்டதிக்கும் புகழு வந்தாறுமூலை
அன்பான சிற்றாண்டி நகரதனில் உறையும்
வடிவப் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை
மனதினில் நினைக்கவினை மாறியோடிடுமே
என்று ஊர்களைப் பட்டியலிட்டுக் கூறுகின்றது.
மட்டக்களப்பு பகுதியில் கண்ணகை அம்மன் கோவில்களில் நடக்கும் திருவிழாவை சடங்கு என்று கூறுவது அங்குள்ள வழக்கம். வருடந்தோறும் வைகாசி மாத பூரணை நாளுக்கு முந்திய வளர்பிறை காலத்தில் (பூர்வ பட்சம்) விழா நடத்தப்படுகிறது.

மட்டக்களப்பில் கிடைத்த கண்ணகி சிலை ஒன்று லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் (ஆங்கிலம்: British Museum) காணப்படுவதாக கலாயோகி ஆனந்த குமாரசுவாமி தனது இந்திய, இந்தோனேசிய கலை வரலாறு என்ற நூலில் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட அந்த சிலையின் சிறப்பினை வியந்து எழுதியுள்ளார். எனினும் "இச்சிலை, முலை ஒன்றை இழந்த பத்தினியான கண்ணகிக்குரியது அல்ல" என கலைப்புலவர் . நவரத்தினம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கண்ணகி அம்மனின் கோபத்தினாலேயே வைசூரி, குக்கல், வெப்பு, சின்னம்மை, வயிற்றுக்கடுப்பு, மங்கமாரி, கண் நோய், பெருஞ்சுரம் போன்ற சூட்டு நோய்கள் பரவுகின்றன என மட்டக்களப்பு மக்கள் பலர் நம்புகின்றனர். காளி அம்மனின் அம்சமான கண்ணகையின் பரிகலங்கள் (அணுக்கத் தேவதைகள்) எண்மர் உளர் என்றும் அவர்களே இந்த நோய்களுக்குத் தலைவர்கள் என்றும் அங்கு கூறப்படுகிறது.


வழக்குரை காவியம்
மட்டக்களப்பு கோவில்களில் படிக்கப்படும் கண்ணகி வரலாறு கண்ணகியின் பெயராலோ அல்லது சிலம்பின் பெயராலோ அழைக்கப்படுவதில்லைவழக்குரை காவியம் அல்லது வழக்குரை என்றே அழைக்கப் படுகிறது. இதில் வரம்பெறு காதை தொடங்கி குளிர்ச்சிக் காதை வரையான பதினொரு காதைகள் உள்ளன. வழக்குரை காவியம் ஏறக்குறைய 2220 பாடல்களைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒன்று -
கானிரங்கு தொடைமார்பன் காவிரிசூழ் வளநாட்டில்
வானிரங்கு புகழ்கொண்ட மாசாத்தர் கோவலற்காய்த்
தேனிரங்கு மொழிமடவார் சேயிழையார் மாதவியார்
தானிரங்கு கதைபாடத் தரணியுள்ளோர் கேளுமெல்லாம்

மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமான வழக்குரை காவியம் கண்ணகியை பிறப்பிலிருந்தே தெய்வநிலை சேர்த்து வளர்த்துவரும் பாங்கினைக் கொண்டதாக அமைந்துள்ளது.


வழக்குரை காவியத்தில் கூறப்படும் கண்ணகி கதை

சிவபெருமான் பராசர முனிவரின் மகளது அழகினையும் நற்குணங்களையும் கண்டு "நீ பூலோகத்தாரால் தெய்வமாகப் போற்றப்படும் தகைமை உடையவள். ஆதலால், கற்புக்கரசியாக விளங்கவும், மானிடர்கள் உன்னை பத்தினித் தெய்வமாக வணங்கவும் உனக்கு வரம் தந்தோம்" என்று சொன்னார். (சில கிராமிய இலக்கியங்கள் அவள் பெயர் "நாகமங்கலை" என்கின்றன).
அச்சமயம் பார்வதி தேவி, "பாண்டிய மன்னன் தனது தவப்பேற்றினால் பெற்ற பாண்டிய நாட்டில் புதுவகையான மாங்கனி ஒன்று காணப்பட்டது. கண்ணுக்குத் தெரிந்த அக்கனி அதனைப் பறிக்க யாரேனும் மரத்தில் ஏறிச்சென்றால் மறைந்துவிடும். பாண்டிய மன்னன் அம்பெய்து அக்கனியை வீழ்த்தினான். ஆனால் அக்கனி நிலத்தில் விழாது அந்தரத்தில் தொங்கியது. அதனைப் பிடிக்க அரசன் கையை நீட்டியபோது அந்தக் கனி நெருப்புக் கோளமாகி அரசன் கைகளில் வீழ்ந்தது. அரசன் பயந்து கனியை நிலத்தில் விட்டெறிந்தான். தன் நெற்றியில் அரும்பிய வியர்வையை தன் கையால் துடைத்தான். மாங்கனியைத் தொட்ட கை நெற்றியில் பட்டதும் நெற்றிக்கண் அழிந்தது.நிலத்தில் வீழ்ந்த கனியை அரசன் மனைவியிடம் கொடுத்தான்.அக்கனி தெய்வத்தன்மை பொருந்தியது என அவள் அதனை ஒரு பொற் குடத்தில் இட்டு வைத்தாள்.மூன்றாம் நாள் பொற்குடத்தை அரசவைக்குக் கொண்டு வந்தபோது மாங்கனி பெண்குழந்தையாக மாறியிருந்தது. அச்சமயம் அரண்மனைச் சோதிடர்கள் இக்குழந்தை "பீடுறும் மதுரை அரசோடழியக் காரணமாகும்" எனச் சொன்னதால் மன்னன் குழந்தையை அழகிய பேழை ஒன்றில் வைத்து ஆற்றில் விட்டான்.நெற்றிக்கண்ணால், தான் ஈசனுக்கு நிகரானவன் என ஆணவம் கொண்டிருக்கிறான். அதை அழிப்பாய் என அவளுக்கு ஆணையிட்டாள். அந்த ஆணையை நிறைவேற்றுவதற்காக பராசர முனிவரின் மகளுக்கு பாண்டிய நாடு பிறப்பிடமாக கற்பிக்கப் பட்டது.


இக்காலத்தில் சோழ நாட்டில் கரிகால் பெருவளத்தான் ஆட்சி செய்து வந்தான். சோழ நாட்டின் தலை நகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் மாசாத்துவான், மாநாய்கன் என்ற இரண்டு வணிகர்கள் வாழ்ந்தனர். மாசாத்துவானுக்கு கோவலன் என்றொரு மகன் இருந்தான். மாநாய்கனுக்கு குழந்தைப்பேறு இல்லாதிருந்தது. இருவரும் ஒரு நாள் கடற்கரையில் நிற்கும்போது குழந்தையுடன் பேழை வருவதைக் கண்டனர். மாநாய்கன் அக்குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக்கொண்டான். தன் வாழ்வில் ஒளியும் மகிழ்ச்சியும் ஏற்றிய காரணத்தால் குழந்தைக்கு கண்ணகை எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தான். இதன் பின்னர், வழக்குரை கதை பெருமளவு சிலம்புடன் ஒத்தும், சில இடங்களில் மாறுபட்டும் செல்கிறது.



இராஜராஜ சோழன் தஞ்சையில் ஏற்படுத்திய கண்ணகி ஆலயம்

 

பதினோராம் நூற்றாண்டில் தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றி சிங்கள மன்னனாகிய ஐந்தாவது மகிந்தனையும் அவனது மனைவியையும் சிறைபிடித்து வந்தான். அவர்கள் இருவரும் சகல மரியாதைகளுடன் ஒரு மாளிகையில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். சிங்கள மன்னனின் மனைவி பத்தினி வழிபாடு இல்லாமையால் வருந்தினாள். பண்பும் கருணையும் மிகவும் உடையவனான இராஜராஜ சோழன் அவள் விருப்பப்படி கண்ணகி கோவில் அமைத்துக் கொடுத்ததோடு பத்தினி விழாவும் அங்கு நடைபெறச் செய்தான். அக்காலத்தில் சோழநாட்டில் பத்தினி வழிபாடு மறைந்து போயிருந்த காரணத்தால் தமிழக மக்கள் கண்ணகியை சிங்கள நாட்டிலிருந்து வந்த தெய்வமாகக் கருதி சிங்கள நாச்சி கோவில் என அக்கோவிலை அழைத்தனர். நாளடைவில் அப்பெயர் செங்களாச்சி என திரிபடைந்து பின்னர் சாதாரண மக்களால் செங்காச்சி அம்மன் என அழைக்கப்பட்டது.



New Olympic Sports Club Kaluwanchikudy Web Developer

Morbi aliquam fringilla nisl. Pellentesque eleifend condimentum tellus, vel vulputate tortor malesuada sit amet. Aliquam vel vestibulum metus. Aenean ut mi aucto.