ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் (1879 - 1955)




 இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், ஒப்புயர்வற்ற அறிஞராகவும் விளங்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவரது சார்புக் கொள்கை க்காக (Theory of Relativity) உலகப் புகழ் பெற்றவர். இவர் வகுத்தமைத்த சார்புக் கொள்கையில் உண்மையில் இரு கொள்கைகள் அடங்கியுள்ளன. ஒன்று "சிறப்புச் சார்புக் கொள்கை" (Special Theory of Relativitiy) இது 1905 இல் வகுத்தமைக்கப்பட்டது. இன்னொன்று " பொதுச் சார்புக் கொள்கை" (General Theory of Relativity) இது 1915 இல் வகுத்தமைக்கப்பட்டது. இந்த இரண்டாவது கொள்கையை ஐன்ஸ்டீனின் "ஈர்ப்பு விதி" (Law of Gravitation) என அழைப்பது பொருத்தமாக இருக்கும். இவ்விரு கொள்கைகளுமே மிகவும் சிக்கலானவை. எனவே, அவற்றை இங்கு விளக்கப் போவதில்லை. எனினும், சிறப்புச் சார்பில் குறித்துச் சில கருத்துகளைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். 

" எல்லாம் சார்புடையவை" என்பது நன்கறிந்த மூதுரை. இந்தத் தத்துவ வெற்றுரையை ஐன்ஸ்டீன் கொள்கை மீண்டும் கூறவில்லை. அறிவியல் அளவைகள் சார்புடையவை என்பதைத் துல்லியமான கணித சூத்திரமாக இவரது கொள்கை கூறுகிறது. காலம் மற்றும் இடம் பற்றிய அகநிலைப் புலனியல் காட்சிகள் யாவும் நோக்குபவரைப் பொருத்தது என்பது தெளிவாக உண்மை. ஆனால், ஐன்ஸ்டீனுக்கு முன்பு இந்த அகநிலைக் கருத்துகளின் பின்புலத்தில் உண்மையான தொலைவுகளும், வரம்பற்ற காலமும் இருப்பதாகவும், அவற்றைத் துல்லியமான கருவிகளைக் கொண்டு புறநோக்குடன் அளவிட முடியும் என்றும் பெரும்பாலான மக்கள் நம்பினார்கள். வரம்பற்ற காலம் என்று எதுவும் இருப்பதை ஐன்ஸ்டீன் கொள்கை மறுத்து, அறிவியல் சிந்தனையைப் புரட்சிகரமாக மாற்றியது. காலம் மற்றும் இடம் பற்றிய நமது கருத்துகளை அவரது கொள்கை எவ்வாறு அடியோடு மாற்றியது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு கூறலா

"X" என்னும் ஒரு விண்வெளிக் கலம், வினாடிக்கு 1,00,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகக் கொள்வோம். விண்வெளிக் கலத்திலும், பூமியிலும் உள்ள நோக்கர்கள் இந்த வேகத்தை அளவிடுகிறார்கள். அவர்களது அளவீடுகள் ஒத்திருக்கின்றன. இதற்கிடையில் "Y" என்னும் விண்வெளிக் கலம், "X" என்ற விண்வெளிக் கலம் செல்லும் அதே திசையில், ஆனால் அதைவிட அதிக வேகத்தில் செல்கிறது. பூமியிலுள்ள நோக்கர்கள் "Y" விண்வெளிக் கலத்தின் வேகத்தை அளவிடுங்கால், அது வினாடிக்கு 1,80,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகக் காண்கிறார்கள். "Y" விண்வெளிக் கலத்திலுள்ள நோக்கர்கள் அதே முடிவுக்குத் தான் வருவார்கள். இரு விண்வெளிக் கலங்களும் ஒரே திசையில் செல்வதால், அவற்றின் வேகங்களுக்கிடையிலான வேறுபாடு வினாடிக்கு 80,000 கிலோ மீட்டர் என்றும், வேகமாகச் செல்லும் கலம், மெதுவாகத் செல்லும் கலத்திலிருந்து இதன் வேக விகிதத்திலேயே விலகிச் செல்லும் என்றும் முடிவு கட்டத் தோன்றும். ஆனால், இரு விண்வெளிக் கலங்களிலிருந்தும் காட்சிப் பதிவீடுகளைச் செய்யும்போது, அந்த இரு கலங்களுக்குமிடையிலான தொலைவு வினாடிக்கு 80,000 கி.மீ. என்ற வீதத்தில் இல்லாமல், வினாடிக்கு 1,00,000 கி.மீ. என்ற வீதத்தில் அதிகரிப்பதை இரு கலங்களிலுமுள்ள நோக்கர்கள் ஒப்புக் கொள்வார்கள் என ஐன்ஸ்டீன் கொள்கை ஊகித்துரைக்கிறது.வெளித் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடும் போது, இந்த முடிவு பொருத்தமற்றதாகத் தோன்றலாம். இதில் ஏதேனும் சொல்லாட்சித் தந்திரம் இருக்கிறது என்ற ஐயம் ஏற்படக் கூடும். 

இந்தச் சிக்கலில் சில முக்கிய விவரங்கள் விடுபட்டிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் இத்தகைய ஐயப்பாட்டுக்கு இடமேயில்லை. விண்வெளிக் கப்பல்களின் கட்டுமானமோ, அவற்றைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் விசைகளோ இந்த முடிவுகளுடன் ஒரு தொடர்பும் கொண்டிருக்கவில்லை. காட்சிப் பதிவீடுகளில் எவையேனும் தவறுகள் காரணமாகவும் இந்த முடிவுகள் ஏற்படவில்லை. அளவீடும் கருவிகளிலும் எவ்விதக் கோளாறும் இல்லை. ஏமாற்று வேலை எதுவும் இதில் கிடையாது. காலம் மற்றும் இடம் இரண்டின் அடிப்படை இயல்பின் விளைவாகவே மேற்சொன்ன முடிவு ஏற்பட்டதாக ஐன்ஸ்டீன் உறுதிபடக் கூறியுள்ளார். இவையெல்லாம் செயல்முறைக்கு ஒவ்வாத,. மட்டுமீறிய கோட்பாட்டியலானவை எனக் கருதத் தோன்றும். உண்மையைக் கூறின், நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு கற்பனைக் கருதுகோள் என்று சார்புக் கொள்கையைப் பல ஆண்டுகளாகப் பெரும்பாலோர் ஒதுக்கி வைத்திருந்தார்கள். 1945 ஆம் அண்டில் ஹிரோஷிமாவிலும், நாகசாகிலும் அணுகுண்டுகள் போடப்பட்ட பின்னர், இந்தத் தவற்றினை யாரும் செய்யவில்லை.

" பொருண்மையும், ஆற்றலும் ஒருவகையில் சரி நிகரானவை; அவற்றுக்கிடையிலான தொடர்பினை E= Mc2 என்னும் சூத்திரதின் மூலம் குறிப்பிடலாம். இதில் E என்பது ஆற்றல்; M என்பது பொருண்மை. C என்பது ஒரு பெரிய இலக்கம். அது வினாடிக்கு 1,68,000 கி.மீ. - க்குச் சமம். அதன் இருபடி வர்க்கம் (C2) இதைவிட மிகப்பெரிய இலக்கணமாகும். எனவே, பொருண்மையின் ஒரு சிறிய நுண்பகுதி ஓரளவு உருமாற்றம் பெற்றால் கூட அளவற்ற ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது தெளிவாகிறது. 

ஆனால், E=Mc2 என்ற சூத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு எவரும் ஓர் அணுமின் நிலையத்தை நிறுவி விடவோ இயலாது. அணு ஆற்றலை உருவாக்குவதில் வேறு பலரும் மிக முக்கியமான பணிகளை ஆற்றியிருக்கிறார்கள் என்பதை இங்கு மறந்துவிடலாகாது. இத்துறையில் ஐன்ஸ்டீனின் பங்கு தலையாயது என்பதை மறுப்பதற்கில்லை. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டுக்கு 1939 இல் ஐன்ஸ்டீன் ஒரு கடிதம் எழுதினார். அதில், அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகளை விளக்கியிருந்தார். அத்துடன், ஜெர்மானியர்கள் அணுகுண்டு தயாரிப்பதற்கு முன்னதாக அமெரிக்கா தயாரித்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்தக் கடிதம் தான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மன்ஹாட்டன் திட்டத்தை அமெரிக்கா தொடங்குவதற்குக் காரணமாக இருந்தது. இந்தத் திட்டத்தின் விளைவாகத்தான் முதலாவது அணுகுண்டு தயாரிக்கப்பட்டது. சிறப்புச் சார்பியல் மீது கடுமையான சர்ச்சை எழுந்தது. ஆனால், ஓர் அம்சத்தை மட்டும் எல்லோரும் ஒருமனதாக ஒப்புக்
கொண்டார்கள். அதாவது " இதுகாறும் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் கோட்பாடுகள் இது" என்பதே அது. ஆனால், ஐன்ஸ்டீன் " பொதுச் சார்புக் கொள்கை" இதை விடவும் திடுக்கிடத்தக்கதாக இருந்தது. ஈர்ப்பாற்றல் விளைவுகள், இயற்பியல் விசைகளின் காரணமாக ஏற்படுபவை" என்று ஐன்ஸ்டீனின் கொள்கை கூறுகிறது. இது உண்மையிலே அதிர்ச்சியூட்டிய ஒரு கொள்கையாகும்.! விண்வெளியிலுள்ள ஒரு வளைவை எவ்வாறு அளவிட முடியும்? விண்வெளி வளைந்திருக்கிறது எனக் கூறுவதே சரிதானா? ஐன்ஸ்டீன் தமது கொள்கையை வகுத்தமைத்துக் கூறியதுடன் நின்றுவிடவில்லை. அவர் தமது கொள்கையை தெள்ளத்தெளிவாக கணித வடிவத்தில் அமைத்தார். அதிலிருந்து, திட்டவட்டமான அனுமானங்களைச் செய்ய முடிந்தது. அந்த அனுமானங்கள் பரிசோதிக்கப்பட்டு உண்மையென மெய்ப்பிக்கப்பட்டன. முழுச்சூரிய கிரணங்களின்போது மேற்கொள்ளப்பட்ட பல பரிசோதனைகளிலிருந்து, ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் சரியானவை என்பது உறுதியாகியிருக்கிறது. 

" பொதுச்சார்புக் கொள்கை" பல வகைகளில் மற்ற அறிவியல் விதிகள் அனைத்திலிருந்தும் வேறுபட்டுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. முதலாவதாக, ஐன்ஸ்டீன் இந்தக் கொள்கையைக் கவனமான பரிசோதனைகளின் அடிப்படையில் வகுத்தமைக்கவில்லை. கிரேக்கத் தத்துவ ஞானிகளும், மத்திய காலத்திய அறிஞர்களும் செய்ய முயன்ற போது, செவ்வொழுங்கு (Symmetry) , கணித நேர்த்தி (Mathematical Elegance) ஆகியவற்றின் அடிப்படையிலான பகுத்தறிவுவாத ஆதாரங்களைக் கொண்டு தமது கொள்கையை வகுத்தமைத்தார். (இவ்வாறு செய்வதன் மூலம் நவீன அறிவியலின் அனுபவ முறைக் கண்ணோட்டத்திலிருந்து அவர் விலகிச் சென்றார்). ஆனால், அழகு செவ்வொழுங்கு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்த கிரேக்கர்கள், பரிசோதனைகளுக்குத் தாக்குப் பிடிக்கவல்ல எந்திரவியல் கோட்பாடு ஒன்றை வகுத்தமைப்பதில் ஒரு போதும் வெற்றி பெறவில்லை. ஆனால், ஐன்ஸ்டீன் கொள்கை இது காறும் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளிலும் வெற்றி கண்டிருக்கிறது. பொதுச் சார்புக் கொள்கையானது, அறிவியல் கோட்பாடுகள் அனைத்திலும் மிகவும் அழகானது, ஆற்றல் வாய்ந்தது. அறிவுக்கு முழு நிறைவளிக்கக் கூடியது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவே ஐன்ஸ்டீன் அணுகுமுறைக்குச் சிறந்த வெற்றியாகும். 

பொதுச் சார்புக் கொள்கை இன்னொரு அம்சத்திலும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. மற்ற அறிவியல் விதிகளில் பெரும்பாலானவை ஏறத்தாழத்தான் செல்லும்படியாகக் கூடியவை. அவை பல சூழ்நிலைகளில்
சரியாக உள்ளன; ஆனால், எல்லாச் சூழ்நிலைகளிலும் சரியாக இருப்பதில்லை. நிலைகளிலும் சரியாகவே இருந்து வருகிறது. இதுகாறும், எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்தக் கொள்கை தவறாகிப் போனதில்லை; இந்தக் கொள்கைக்கு எதிர்காலப் பரிசோதனைகளில் இந்த அளவுக்கு வெற்றி கிட்டாமல் போகலாம். எனினும், இதுகாறும் விஞ்ஞானிகளால் வகுக்கப்பட்டுள்ள அணுகுமுறைகளில், இறுதி உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளது சார்புக் கொள்கை தான் என்பதில் ஐயமில்லை.


ஐன்ஸ்டீன் தமது சார்புக் கொள்கைகளுக்காகப் புகழ் பெற்றுள்ள போதிலும், அவருடைய மற்ற அறிவியல் சாதனைகளும் விஞ்ஞானி என்ற முறையில் அவருக்குப் புகழ் தேடித் தந்திருக்கிறது. ஒளி மின் விளைவினை (Photo Electric Effect) அவர் விளக்கிக் கூறினார். இதற்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விளக்கத்தில் "ஃபோட்டோன்" என்ற ஒளித்துகள் இருப்பதை அவர் கண்டறிந்து கூறினார். ஒளியில் மின்காந்த அலைகள் அடங்கியிருக்கின்றன என்றும், அலைகளும், துகள்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை என்றும் நெடுங்காலமாகக் கருதப்பட்டு வந்தது. இந்தப் பழைய கொள்கையை ஐன்ஸ்டீனின் கொள்கை சிதறடித்து விட்டது. இவருடைய ஒளிமின் விளைவு விதி நடை முறையில் பெருமளவுக்குப் பயன்பாடுடையதாகியதுடன், ஒளித் துகள் பற்றி இவரது கருதுகோள் பேருதவியாக இருந்தது. இன்று கதிரியக்க அலைவீச்சுக் கோட்பாட்டின் ஓர் அங்கமாக இந்தக் கருதுகோள் விளங்குகிறது. 

ஐன்ஸ்டீனின் முக்கியத்துவத்தை மதிப்பிடுங்கால், அவரை ஐசக் நியூட்டனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். ஐசக் நியூட்டனின் கோட்பாடுகள், அடிப்படையில் புரிந்து கொள்வதற்கு எளிதானவை; இந்தக் கோட்பாடுகளை முதன் முதலில் உருவாக்கியதில் தான் அவருடைய அறிவாற்றல் அடங்கியுள்ளது. மாறாக, ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைகள் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானவை. அவற்றை மிகக் கவனமாக விளக்கிக் கூறினால் கூட விளங்கிக் கொள்வது கடினம். அப்படி கடினமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்; நியூட்டனின் சில கொள்கைகள் அவர் காலத்தில் நிலவிய அறிவியல் கொள்கைகளுடன் பெரிதும் முரண்பட்டிருந்த போதிலும் தனக்குத்தானே முரண்பாடாக இருக்கவில்லை. இதற்கு மாறாக, சார்புக் கொள்கையில் முரண்பாடுகள் நிறைந்திருக்கின்றன. ஐன்ஸ்டீன் புகழ் பெறாதிருந்த குமரப் பருவத்திலேயே தமது கருது கோள்களை வகுத்தமைத்தார். அவை பரிசோதிக்கப்படாமல் இருந்தன. அவர் தமது கருதுகோள்களில் கண்டறிந்த முரண்பாடுகளால் மனச் சோ‘ர்வடையவில்லை. அக்கொள்கைகளை அவர் ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. இந்த முரண்பாடுகளை அவர் தமது அறிவாற்றல் மூலம் மிகக் கவனமாக ஆராய்ந்தார். இந்த முரண்பாடுகள் தமது தவறினால் ஏற்பட்டவை அல்ல என்பதையும், அவை இயல்பாகவே உள்ளவை என்பதையும் அவர் மெய்ப்பித்தார். அந்த முரண்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு காண்பதற்குரிய சரியான, நுட்பமான வழி உண்டு என்பதையும் அவர் கூறினார்.

இன்று, ஐன்ஸ்டீனின் கொள்கை தான், நியூட்டனின் கொள்கையை விட அடிப்படையில் மிகவும் "துல்லியமானது" என்று நாம் கருதுகின்றோம். எனினும், இந்தப் பட்டியலில் ஐன்ஸ்டீன் கீழ் மட்டத்தில் இடம் பெற்றிருப்பதேன்? ஏனென்றால் நியூட்டனின் கொள்கைகள் தான் நவீன அறிவியலுக்கும் தொழில் நுட்பத்திற்கும் அடித்தளம் அமைத்தன. நவீனத் தொழில் நுட்பம் இன்றுள்ள அளவுக்கு முன்னேற்றமடைந்திருப்பதற்கு நியூட்டனின் கண்டுபிடிப்புகளே காரணம்; ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள் காரணம் அல்ல. 

இந்தப் பட்டியலில் ஐன்ஸ்டீனின் இடத்தைப் பாதிக்கின்ற மற்றொரு காரணமும் உண்டு; பெரும்பாலான தேர்வுகளில் ஒரு முக்கியமான கொள்கையை உருவாக்குவதில் பலர் பங்கு பெற்றிருக்கலாம். சமதர்ம தத்துவ வரலாறு, மின்விசை மற்றும் காந்த விசைக் கோட்பாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சார்புக் கொள்கையைக் கண்டுபிடித்த பெருமை முழுமையாக ஐன்ஸ்டீனைச் சேராது என்ற போதிலும் அதன் பெரும் பகுதிக்கு அவர் தகுதியுடையவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இதைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்த வேறெந்தக் கொள்கையும் போலன்றி சார்புக் கொள்கைகளின் பெரும்பகுதி தனியொரு மனிதரின் அறிவுத் திறனால் உருவானது எனக் கூறுவது நியாயமானதாகும். 

ஜெர்மனியிலுள்ள உல்ம் நகரில் 1879 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் பிறந்தார். சுவிட்சர்லாந்தில் உயர்நிலைக் கல்வி பயின்ற இவர் 1900 இல் இவர் பி.எச்.டி. பட்டம் பெற்றார்., இவர் ஆசிரியத் தொழிலில் ஈடுபட விரும்பினார். ஆனால், அப்போது இவருக்கு ஆசிரியர் வேலை எதுவும் கிடைக்க வில்லை. எனினும், அதே ஆண்டில் சிறப்புச் சார்பியல், ஒளி மின்விளைவு, பிரவுனியன் இயக்கக் கோட்பாடு ஆகியவை பற்றிய தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மிகச் சில ஆண்டுகளிலேயே இவரது இந்த ஆய்வுக் கட்டுரைகள்-முக்கியமாகச் சார்பியல் பற்றிய கட்டுரை-உலகில் தற்சிந்தனை வாய்ந்த தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெருமையை இவருக்குத் தேடித் தந்தன. இவருடைய கொள்கையை இவருக்குத் தேடித் தந்தன. இவருடைய கொள்கைகள் மிகுந்த சர்ச்சைக்குரியனவாக இருந்தன. டார்வின் நீங்கலாக, தற்கால விஞ்ஞானிகளில் வேறு எவரும் ஐன்ஸ்டீனைப் போல் வாதத்திற்கிடமானவராக இருந்ததில்லை. எனினும், இவர் 1913 இல் பெர்லின் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அதே சமயம், கெய்சர் வில்ஹெல்ம் இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகவும், பிரஸ்ஸியன் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். இந்தப் பதவிகள் தம் முழு நேரத்தையும் ஆராய்ச்சியில் செலவிட இவருக்குச் சுதந்திரமளித்தன. 

இந்தப் பதவிகளை இவருக்கு அளித்ததற்காக ஜெர்மன் அரசு வருந்துவதற்குக் காரணமே இல்லை. ஏனென்றால், இப்பதவிகளை ஏற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே இவர் பொதுச் சார்புக் கொள்கையைக் கண்டுபிடித்தார். 1921 இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் தமது ஆயுட்காலத்தின் பிற்பகுதி முழுவதிலும், உலகின் தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெரும் புகழுடனேயே வாழ்ந்தார். 

ஐன்ஸ்டீன் யூதராக இருந்ததால், ஜெர்மனியில் இட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு அவருடைய நிலைமை நிலையற்றதாகியது. இவர் 1933 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்திலுள்ள பிரின்ஸ்டனில் குடியேறினார். அங்கு உயர் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தில் பணிபுரியலானார். 1940 இல் இவர் அமெரிக்கக் குடிமகன் ஆனார். ஐன்ஸ்டீனின் முதல் திருமணம் மணமுறிவில்
முடிந்தது. இரண்டாம் திருமணம் மகிழ்ச்சிகரமாக அமைந்தது; இவருக்கு இரு புதல்வர்கள் பிறந்தனர். இவர் 1955 இல் பிரின்ஸ்டனில் காலமானார். 

ஐன்ஸ்டீன் எப்பொழுதுமே தம்மைச் சுற்றியிருந்த மனித உலகில் அக்கறை காட்டி வந்தார். அரசியல் விவரங்கள் குறித்து அவர் அடிக்கடி தமது கருத்துகளைத் தெரிவித்து வந்தார். அவர் அரசியல் கொடுங் கோன்மையைத் தீவிரமாக எதிர்த்தார். அவர் போர் ஒழிப்புக் கோட்பாட்டாளராகவும் விளங்கினார். யூதர் தாயக இயக்கத்தையும் அவர் தீவிரமாக ஆதரித்தார். உடைகள், சமூக மரபுகள் ஆகியவற்றில் அவர் தனிப் பாணிகளை கையாண்டார். அவர் நயமான நகைக்சுவை யுணர்வுடையவராகவும் மிகுந்த தன்னடக்கம் வாய்ந்தவராகவும் திகழ்ந்தார். வயலின் இசைப்பதிலும் அவர் ஓரளவு திறமை பெற்றிருந்தார். "இது போன்ற மிகச் சிறந்த அணிகலன் ஒன்றை மனித குலம் பெற்றதை எண்ணி மனிதர்கள் இறும்பூது எய்தலாம்" என்று நியூட்டனின் கல்லறையில் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த வாசகம் ஐன்ஸ்டீனுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்தும்.
New Olympic Sports Club Kaluwanchikudy Web Developer

Morbi aliquam fringilla nisl. Pellentesque eleifend condimentum tellus, vel vulputate tortor malesuada sit amet. Aliquam vel vestibulum metus. Aenean ut mi aucto.