உலகியல் வரலாற்றிலே ஜரோப்பிய நாகரிகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப் படுகிறது. ஜரோப்பிய நாகரிக வளர்ச்சிக்கு ஆதி மூலமாகவும், அஸ்த்திவாரமாகவும் திகழ்பவை கிரேக்க, உரோம நாகரிகங்களே என்றால் அதனை எவரும் மறுத்து விட முடியாது. இவ் கிரேக்க, உரோம நாகரிகங்களில் 14ஆம்,15ஆம் நூற்றாண்டுகளில் பல்துறைகளிலும் ஏற்பட்ட புதிய திருப்புமுனையே மறுமலர்ச்சியாகும்.
மறுமலர்ச்சி என்பதற்கு அறிஞர்கள் தத்தமது சிந்தனைகளிற்கேற்ப பல்வேறு வரைவிலக்கணங்களை கூறிய போதும் பொதுவாக மறுமலர்ச்சி என்றால் 'மீண்டும் மலர்தல்' 'மறுபிறப்பு' 'புத்துயிர்ப்பு' எனப் பல பொருள்கள் கொள்ளப் படுகின்றன. அதாவது கி.பி 13ஆம் நூற்றாணடின் இறுதிப் பகுதியில் பழமையான கிரேக்க, உரோம கருவூலங்களைக் கற்பதற்கும், அவை தொடர்பாக ஆராய்வதற்கும் அறிஞர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் பயனாக ஜரோப்பிய வரலாற்றில் அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், சமூகம், அறிவியல், கலை, இலக்கியம், எனப் பல்துறைகளிலும் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டு ஜரோப்பாவில் ஒரு புதிய நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது. இதுவே 'மறுமலர்ச்சி' என அழைக்கப்படுகிறது. இவ் மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பிய வரலாற்றில் ஏற்பட்ட புதிய மாற்றங்களை ஆராய்வதே இக்கைநூலின் பிரதான நோக்கமாகும்.
ஜரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டமைக்கான காரணங்களாக நகரங்களின் செல்வாக்கு, பல்கலைக் கழகங்களின் தோற்றம், அறிவியல் சார்ந்த ஆய்வுகள், வர்த்தகர்களின் தோற்றம், சிலுவை யுத்தம், கடதாசியின் உபயோகம், அச்சியந்திரத்தின் பயன்பாடு போன்ற காரணங்கள் காணப்பட்டாலும் மறுமலர்ச்சி ஏற்பட்டமைக்கான மிகவும் பிரதானமான காரணமாகக் கொள்ளப்படுவது கிழக்கு உரோமப் பேரரசின் வர்த்தக மையமாகக் காணப்பட்ட கொன்ஸ்தாந்தி நோபிள் துறைமுகத்தை ஒட்டோமன் துருக்கியர்கள் 1453ஆம் ஆண்டு கைப்பற்றிக் கொண்டமை எனலாம்.
அதனால் கிழக்கு உரோமப் பேரரசில் வாழ்ந்த மக்கள் மேற்கு உரோமப் பேரரசிற்கு இடம் பெயர்ந்தார்கள். அப்பொழுது கிறிஸ்தவ கல்விமான்கள் கிழக்கு உரோமப் பேரரசான கொன்ஸ்தாந்தி நோபிள் தலைநகரில் பாதுகாக்கப்பட்டு வந்த கிரேக்க உரோமக் கருவூலங்களை எடுத்துக் கொண்டு மேற்கு ஜரோப்பாவிற்குத் தப்பிச் சென்றனர். அங்கிருந்து கொண்டு அவற்றை ஆராய்ந்து புதிய கருத்துக்கள், கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவற்றை வெளியிட்டார்கள். இதனால் கிரேக்க, உரோம கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு ஜரோப்பாவில் புதுயுகம் தோற்றுவிக்கப்பட்டது.
ஜரோப்பாவில் 14ஆம், 15ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்க, உரோம நாகரிகங்களில் ஏற்பட்ட மறுமலர்ச்சியானது ஜரோப்பிய வரலாற்றில் பல்துறைகளிலும் புதுயுகத்தினைத் தோற்றுவித்தது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. அதாவது ஜரோப்பிய வரலாற்றில் அரசியல்;, விஞ்ஞானம், சமூகம், அறிவியல், சமயம், கலைகள், இலக்கியம் எனப் பல்துறைகளிலும் மறுமலர்ச்சியானது புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி ஜரோப்பாவை நவீன யுகத்திற்கு அழைத்துச் சென்றது என்றால் அதனை எவரும் மறுத்து விட முடியாது.
மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பாவின் அரசியல் துறையிலும் பல்வேறு புதிய மாற்றங்கள் உட்புகுத்தப்பட்டன. மத்திய கால ஜரோப்பாவின் அரசியல் நிலையிலிருந்து முற்றுமுழுதாக மாறுபட்ட புதிய சிந்தனைகளைக் கொண்ட அரசியலே மறுமலர்ச்சியின் பின் நிலை பெற்றிருந்தது. அதாவது மத்தியகால ஜரோப்பாவில் நிலவிய பிரபுக்களின் அளவிற்கதிகமான அதிகாரங்கள் குறைக்கப் பட்டு நாட்டின் அதிகாரமானது மன்னனது கைகளிற்குச் சென்றடைந்தது. அதாவது மத்திய மயப்படுத்தப்பட்ட ஆட்சி முறை ஜரோப்பாவில் தோற்றுவிக்கப் பட்டது. குறிப்பாக திருச்சபையினர், பிரதேச ஆட்சியாளர்கள் ஆகியோரின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப் பட்டதோடு மத்தியதரவகுப்பினர்கள் அரசின் உயர் பதவிகளில் நியமிக்கப் பட்டார்கள். இதன் காரணமாக ஜரோப்பிய அரசியலில் உறுதித்தன்மையும், தேசிய ஒற்றுமையும், தேசிய சிந்தனையும் ஊடுருவிக் கொண்டன.
மத்திய கால நிலமானிய முறையின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து ஜரோப்பாவில் ஸ்பெயின். பிரான்ஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் தேசிய அரசுகளாக எழுச்சி பெற்றன. இத்தேசிய அரசுகளின் வளர்ச்சி மறுமலர்ச்சியினால் ஜரோப்பிய அரசியல் வரலாற்றில் தோற்றுவிக்கப் பட்ட புதிய பரிமாணத்தினையே சுட்டிநிற்கிறது.
மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பிய அரசியலில் தோற்றுவிக்கப்பட்ட புதுயுகத்தில் நாடுகளின் அரசியல் எல்லைகள் வரையறுக்கப் பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அத்துடன் அரசியலில் பிறப்பு அடிப்படையில் பிரபுக்கள் பெற்றிருந்த உரிமைகள், சலுகைகள் போன்றவை இல்லாதொழிக்கப் பட்டன, ஜரோப்பிய நாடுகளில் தேசியப் படைகள் உருவாக்கப் பட்டு பெரும்பாலான நாடுகளில் ஒரே சட்டம், நீதி முறைகள் கடைப்பிடிக்கப் பட்டன.
மறுமலர்ச்சியினால் ஏற்படுத்தப்பட்ட புதுயுகத்தில் வர்த்தகத்தினை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் உருவாக்கப் பட்டன. அத்துடன் பிறப்பு அடிப்படையில் சமூக அந்தஸ்த்தை தீர்மானிக்கும் முறை இல்லாதொழிக்கப்பட்டு மத்தியதர வகுப்பினர் அரசியலில் உள்வாங்கப் பட்டனர். முன்னைய காலப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தெய்வீகவுரிமைக் கோட்பாடுகள் தகர்த்தெறியப்பட்டு அரசியலில் புதிய கொள்கைகளும், கோட்பாடுகளும் உட்புகுத்தப்பட்டன. மன்னர்கள் நாடுகாண் பயணங்களிற்கு தங்களால் முடிந்தளவு ஆதரவினை வழங்கியதோடு மக்களது நலன்களைப் பேணும் வகையில் அரசியலை முன்னெடுத்தார்கள். அத்துடன் அவர்கள் பொருளாதாரத் துறையினை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டார்கள்.
மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பிய வரலாற்றில் தோற்றுவிக்கப்பட்ட புதுயுகத்தில் விஞ்ஞானத் துறையானது பல்வேறு கண்டுபிடிப்புக்களுடன் மாபெரும் வளர்ச்சியினைப் பெற்றுக் கொண்டது. வானவியல் தொடர்பாக ஆராட்சிகளை மேற்கொண்டு விஞ்ஞானிகள் பல புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டார்கள். வானவியலின் தந்தை எனப் போற்றப் படுகின்ற போலந்து நாட்டைச் சேர்ந்த 'நிக்கலஸ் கொப்பர்னிக்கஸ'; என்பவரே நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவர் எனலாம். இவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சான்றாதாரங்களின் வாயிலாக புவியானது தனது அச்சில் கோளவடிவில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் வலம் வருகிறது என்ற புதிய கோட்பாட்டை உலகின் பார்வைக்கு வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றியே வலம் வருகின்றன என்ற கருத்தையும் நிரூபித்துக் காட்டினார்.
அவரை அடுத்து வந்த ஜேர்மனியரான ஜோகனர்ஸ் கெப்லர் என்ற விஞ்ஞானி அனைத்துக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன. என்பதையும், கிரகங்களிற்கிடையிலான தூரத்தைக் கணக்கிடும் முறையினையும் கணித
சமன்பாடுகளை ஆதாரம் காட்டி நிரூபித்தார். ஜரோப்பாவில் விஞ்ஞானத் துறையின் வளர்ச்சிக்கு 'கலிலியோக்கலிலி' ஆற்றிய சாதனைகளும் அளப்பரியவை. இத்தாலிய நாட்டவரும், கணிதவியல் பேராசிரியருமான இவர் தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் வானில் உள்ள பொருட்களை அவதானித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டார். குறிப்பாக சந்திரனை அவதானித்து அங்கேயும் புவியைப் போல மலைகள், சிகரங்கள் காணப்படுகின்றன. என்பதை எடுத்துக்காட்டினார். கலிலியோக்கலிலி தெரிவித்த கருத்துக்களை இத்தாலியின் 'நியாயசபை' வன்மையாகக் கண்டித்ததுடன் அவரை நாடுகடத்தினார்கள். இதன் பின்னர்தான் அவரை உலகம் அறியத் தலைப்பட்டது. அவர் உலகியல் வரலாற்றில் 'விஞ்ஞானப் பரீட்சார்த்தங்களின் பிதா' எனச் சிறப்பிக்கப் படுகிறார்.
உலகியல் வரலாற்றில் விஞ்ஞானத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவராக 'சேர் ஜசாக் நியூட்டன'; விளங்குகின்றார். அவர் 'நியூட்டனின் விதி' என்ற கோட்பாட்டினூடாக விஞ்ஞான வளச்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தார். அவர் அப்பிள் பழத்தை வைத்து நடத்திய பரிசோதனை மூலம் ஈர்ப்பு விசை குறித்த விஞ்ஞானக் கருத்தை முன்வைத்தார். இவரது நியூட்டனின் விதியின் பிரகாரம் பொருட்கள் ஒன்றில் அசைவற்றனவாகவோ, அல்லது சமனான வேகத்தில் அசைந்து கொண்டோ இருக்கும் எனவும் குறிப்பிட்டதுடன்; இத்தன்மையினை சக்தியைப் பிரயோகித்து மாற்றியமைக்க முடியும் என்னும் கருத்தினையும் வெளியிட்டார். அவர் எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனான மறு தாக்கம் உண்டு என்பதையும் செய்முறை வழியாக நிரூபித்துக் காட்டினார். அத்துடன் வானவில்லில் ஏழு நிறங்கள் உண்டு என்பதையும், கண்ணாடி ஒன்றின் மீது ஒளி செலுத்தப்படும் போது அது தெறித்து வளைந்து செல்லும் போன்ற அறிவியல் கருத்துக்களை உலகின் பார்வைக்கு வெளிக் கொணர்ந்தார்.
மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்ட புது யுகத்திலே விஞ்ஞானத்தின் ஒரு பாகமான மருத்துவத் துறையும் சிறப்பான வளர்ச்சியினைத் தழுவிக் கொண்டது. சுவீஸ் நாட்டைச் சேர்ந்த சரசல் பஸஸ் ஸ்பானியாவைச் சேர்ந்த மைக்கல் சர்வேஸஸ்;, ஆங்கிலேயரான வில்லியம் ஹார்வே ஆகியோர் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு அரும் தொண்டாற்றினார்கள். இவர்கள் மூவரினாலும் இத்தாலியின் பாதுவா பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உலகப்புகழ் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
'சரசல் பஸஸ்'; என்ற விஞ்ஞானி மனிதனின் நாடித்துடிப்பை அவதானித்து மனிதனுக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் முறையைத் தோற்றுவித்தார். 'மைக்கல் சர்வேஸஸ்' என்பவர் மனிதனுடைய குருதி சுத்திகரிக்கப்படும் முக்கிய தளம் நுரையீரலே என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தினார். 'வில்லியம் ஹார்வே' என்ற விஞ்ஞானி இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் பற்றிய கருத்தினை முதன்முதலில் முன்வைத்தார்.
ஜேர்மனியரான 'ஜோகேன்ஸ் குற்றம்பேர்க்' என்ற விஞ்ஞானி அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அச்சியந்திரத்தின் மூலம் மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மற்றும், புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிவியல் சார்ந்த ஆராட்சி முடிவுகள் போன்றவற்றையும் மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அச்சியந்திரத்தின் கண்டுபிடிப்பு துணைபுரிந்தது. அந்த வகையில் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டதுடன் அவற்றை மக்கள் மத்தியில் நூல் வடிவில் பரப்பினார்கள். இதனால் மக்களிடையே அறிவியல் சிந்தனைகள் ஊடுருவிக் கொண்டன.
மேற் கூறப்பட்ட கருத்துக்களை நோக்குகின்ற போது மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பிய வரலாற்றில் தோற்றுவிக்கப்பட்ட புதுயுகத்தில் விஞ்ஞான வளர்ச்சியும் குறிப்பிடத் தக்கதோர் அம்சமாகும்.
மறுமலர்ச்சியானது ஜரோப்பிய வரலாற்றில் பொருளாதாரத்திலும் புதுயுகத்தினைத் தோற்றுவித்தது. அதாவது 1453 ஆம் ஆண்டு கிழக்கு உரோமப் பேரரசின் தலைநகரான கொன்ஸ்தாந்திநோபிள் துறை முகத்தை ஒட்டோமன் துருக்கியர்கள் கைப்பற்றியதால் ஜரோப்பியர்கள் தமது வர்த்தகப் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அவர்கள் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டு கீழைத்தேய நாடுகளைக் கைப்பற்றினார்கள். அங்கு தமது வர்த்தகப் பொருட்களை விற்பனை செய்ததுடன் அங்கிருந்த மூல வளங்களைப் பெற்றுக்கொண்டு ஜரோப்பாவிற்குச் சென்றார்கள். அதனைப் பயன்படுத்தி பல வர்த்தகப் பொருட்களை உற்பத்தி செய்தார்கள். அதனால் வர்த்தகத்துறை பாரிய வளர்ச்சியடைந்தது. ஜரோப்பியர்கள் நாடுகாண் பயணங்களை மேற்கொள்ளும் பொருட்டு கப்பல் கட்டும் தொழிலை விருத்தி செய்தார்கள். அதன் பயனாக கடல்கடந்த வர்த்தகமும் வளர்ச்சியடைந்தது எனலாம்.
மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பிய பொருளாதாரத்தில் கைத்தொழில் துறையும் வளர்ச்சிபெற்றது. காலணித்துவ நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலதனப் பொருட்களைப் பயன்படுத்தி கைத்தொழில் துறையினை விருத்தியடையச் செய்தார்கள். கைத்தொழிலானது முதலில் இங்கிலாந்திலும் பின்னர் பல ஜரோப்பிய நாடுகளிலும் வளர்ச்சிபெற்றது.
கைத்தொழில் வளர்ச்சியின் பயனாக மனிதசக்திக்குப் பதிலாக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு குறுகிய நேரத்தில் கூடிய பொருட்களை உற்பத்தி செய்து அதிக வருமானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அவற்றை வெளிநாடுகளிற்கும் ஏற்றுமதி செய்தார்கள். அதன் பயனாக சர்வதேச வர்த்தகமும் தோற்றுவிக்கப்பட்டது. மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பாவில் தோற்றுவிக்கப்பட்ட புதுயுகத்தில் கைத்தொழில் வளர்ச்சி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில் வர்த்தக வளர்ச்சியின் காரணமாக வங்கி போன்ற பொருளாதார நிறுவனங்களும், வர்த்தக நகரங்களும் தோற்றம் பெற்றதுடன் பண்டமாற்று முறை வீழ்ச்சியடைந்து ஒரு பொருளின் விலையை தீர்மானிக்கின்ற அலகாக பணம் மாற்றம் பெற்றது. இவ்வாறு பொருளாதார வளர்ச்சியின் மூலம் ஜரோப்பாவில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டது.
மறுமலர்ச்சியின் விளைவாக மேலும் பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் அறிவியல் முன்னேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்தது. திசைகாட்டும்கருவி,
தொலைநோக்கி, படகு, ஆயுதங்கள் போன்ற கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டன. இக்கருவிகளைப் பயன்படுத்தி நாடுகாண் பயணங்கள் மேற்கொள்ளும் போது கடலிலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்தார்கள். அத்துடன் கடலில் பெரிய மீன் இனங்களால் ஏற்படுத்தப் படும் அச்சுறுத்தல்களையும் இக்கருவிகளின் துணையடன் தடுத்து நிறுத்தினார்கள். இதன் மூலம் கடலில் நாடுகாண் பயணங்களை இலகுவாக மேற்கொண்டு பலநாடுகளைக் கண்டுபிடித்தார்கள். மறுமலர்ச்சியின் விளைவுகளான இக் கண்டுபிடிப்புக்கள் ஜரோப்பிய மக்களிடையே புதுயுகத்தினைத் தோற்றுவித்தது.
மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பாவில் தோற்றுவிக்கப் பட்ட புதுயுகத்திலே சமயரீதியிலும் பல சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப் பட்டன. மறுமலர்ச்சியின் பின்னர் ஜரோப்பிய மக்களிiயே அறிவியல் சிந்தனைகள் வலுப்பெறத் தொடங்கின. இதன் காரணமாக கத்தோலிக்க திருச்சபையினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த பாப்பரசரினதும், மதகுருமார்களினதும் ஊழல்கள் கண்டறியப் பட்டன. கத்தோலிக்க திருச்சபையின் நடவடிக்கைகளிற்கு எதிராக புத்திஜீவிகள் பல சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைத்தார்கள். அதற்கு மக்களும் ஆதரவு நல்கினார்கள். இதனால் சமய சீர்திருத்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு கத்தோலிக்க மதகுருமாரின் அளவிற்கதிகமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மக்களை ஆட்சி செய்கின்ற அதிகாரம் மன்னனது கைகளிற்கு திரும்பியது. இதன் அடிப்படையில் பிற்காலத்தில் பல சமயசீர்திருத்த இயக்கங்கள் தோற்றம் பெறவும் மறுமலர்ச்சி காரணமாயிற்று எனலாம்.
மறுமலர்ச்சியின் காரணத்தால் ஜரோப்பாவில் தத்துவத் துறையும் சிறப்பான வளர்ச்சியினைப் பெற்றுக் கொண்டது. திருச்சபை என்ற ஒரு குறுகிய போர்வைக்குள் முடங்கிக் கிடந்த மக்கள் மறுமலர்ச்சியின் பின்னர் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்திக்கத் தலைப்பட்டனர். தம்மைச் சூழவுள்ள விடயங்களை பரந்த மனத்துடன் நோக்குகின்ற பண்பு அவர்களிடத்து மேலோங்கியிருந்தது. அதனால் எந்த ஒரு விடயத்தையும் ஆய்வு செய்யும் போது ஏன்? ஏதற்கு? எப்படி? போன்ற வினாக்களை ஆதாரமாகக் கொண்டு தர்க்க ரீதியாக ஆய்வகளை நிகழ்த்தினார்கள். இதன்பயனாக ஆய்வுகளின் முடிவுகள் உறுதித் தன்மை கொண்டவையாகவும். தீர்க்கமானவையாகவும் அமைந்தன. இக்காலத்தில் வாழ்ந்த தத்துவ அறிஞர்களான நிக்கலோ மாக்கிய வல்லி, கலிலியோக்கலிலி, லியனாடோ டாவின்சி போன்றவர்களின் பங்கும் தத்துவத் துறையின் வளர்ச்சிக்கு வழிகோலியது. மறுமலர்ச்சியினால் தோற்றம் பெற்ற புதுயுகத்தில் தத்துவத்துறை வளர்ச்சியும் ஓர் குறிப்பிடத்தக்க
அம்சமாகும்.
மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றம் பெற்ற புதுயுகத்தில் கல்வித் துறையினுடைய வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கது. கிணற்றுத் தவளைகளாக இருந்த ஜரோப்பியர்கள் மறுமலர்ச்சியின் பின்னர் கடல் தவளைகளாக மாற்றம் பெற்றனர். என்று கூறுவதும் வியப்;பிற்குரியதல்ல. அவர்கள் சுயமாகச் சிந்திக்கவும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப் படுத்தவும், விருப்பமானவற்றைச் செய்யவும் பழகிக் கொண்டார்கள். ஒவ்வொரு மனிதனிடையேயும் காணப்பட்ட குறுகிய சிந்தனையோட்டம் மறுமலர்ச்சியின் பின்னர் செயலிழந்து, அனைத்துச் செயற்பாடுகளையும் பரந்த மனத்துடன் மேற்கொள்ள முற்பட்டார்கள். இதனால் அவர்களது அறிவு விருத்தியடைந்து பல இலக்கியங்களும் தோற்றம் பெற்றன. பிற்காலத்தில் கல்வி வளர்ச்சியடையவும் மறுமலர்ச்சியின் பின்னரான தர்க்கரீதியான சிந்தனையோட்டமே மூலகாரணம் எனவும் குறிப்பிடப் படுகிறது.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களினால் மானிடவியல் கருத்துக்கள் வலுப் பெற்றன. அறிவியல் சிந்தனையும், விஞ்ஞானத்தின் புதிய வளர்ச்சி வேகமும் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டு புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க வழியமைத்துக் கொடுத்தன.
கல்வி வளர்ச்சியின் பெறுபேறாக ஜரோப்பாவில் பல பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப் பட்டமையும் மறுமலர்ச்சியின் விளைவாகவே கொள்ளப்படுகின்றது. நகரங்களிலும், கோயில்களிலும் நிறுவப் பட்டிருந்த பள்ளிகள் விசாலமடைந்து பல்கலைக் கழகங்களாக வளர்ந்தோங்கின. சமுதாயத்தில் மக்கள் சிறந்த முறையில் வாழ முனைந்தார்கள். நாடோடி வாழ்வில் கண்ட சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையையும் நாகரிக வாழ்வில் பொருள் வளத்திற்கேற்ப உருவாக்குவதே கல்விப் பணியாயிற்று. இத்தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல்கலைக் கழகங்களின் தோற்றம் தவிர்க்க முடியாததாயிற்று. இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களாக இங்கிலாந்தில் ஒகஸ்;வேர்ட் பல்கலைக் கழகம், பிரான்சில் பாரிஸ் பல்கலைக் கழகம், இத்தாலியில் நேபிள் பல்கலைக் கழகம், மற்றும் கேம்பிரிஜ் பல்கலைக் கழகம், பொலக்னா பல்கலைக் கழகம், பாதுவா பல்கலைக் கழகம், பிராங் பல்கலைக் கழகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மறுமலர்ச்சியினால் தோற்றுவிக்கப்கட்ட புதுயுகத்தில் இலக்கியங்களின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். நாடகம், தத்துவம் போன்ற துறைகளில் பல இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டன. டான்ரே, பிரான்ஸிஸ் பெற்றா, பொக்காசியோ, நிக்கோலோ மாக்கியவல்லி, இராஸ்மஸ், டி. செர்வாண்டஸ், தோமஸ்மூர், லூடோவிக்கோ, அலிஸ்ரோ ஒலாண்டோ, புரஸ்சோ, ஜாக்கோவோ, சன்னாகரே போன்ற அறிஞர்கள் சிறந்த நூல்கள் பலவற்றைப் படைத்து இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டார்கள்.
இத்தாலிய அறிஞரான 'டான்ரே' மறுமலர்ச்சியின் விடி வெள்ளியாகக் கருதப்படுகிறார். புளோரன்ஸ் நகரைச் சேர்ந்த இவர் ஒரு சிறந்த தத்துவ அறிஞராகும். இவர் பொலக்னா, பாதுவா பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்றார். இவருடைய ஆக்கங்களில் 'தெய்வீக இன்பவியல்' 'டிவைன் கெமடி' போன்ற நூல்கள் சிறப்பிற்குரியன. இத்தாலி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல்கள் பலரதும் வரவேற்பைப் பெற்றன. 'பொத்தாக்' என்பவர் பல நூல்களை இத்தாலிய மொழியில் மொழி பெயர்த்தார். இத்தாலிய உரைநடையின் தந்தை எனச் சிறப்பிக்கப்படுகின்ற 'பொக்காசியோ' என்பவர் நூறு சிறுகதைகளைக் கொண்ட 'டோக்மரா' என்ற கதைத் தொகுதியினை வெளியிட்டார்.
இத்தாலியின் மறுமலர்ச்சி எழுத்தாளர்; எனச் சிறப்பிக்கப்படுகின்ற 'நிக்கோலோ மாக்கியவல்லி'என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட 'வுர்நு PசுஐNஊநு' என்னும் நூல் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப் படுத்துகிறது. 'இராஸ்மஸ்' என்பவரால் உருவாக்கப் பட்ட 'பொய்மைப் புகழ்ச்சி' என்னும் நூல் திருச்சபையின் ஊழல்களையும், மேல்வகுப்பினரின் தவறுகளையும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகிறது. தலைசிறந்த இலக்கிய அறிஞர்களான லியனாடோ டாவின்ஸி, மைக்கல் அஞ்சலோ போன்றவர்கள் இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு மூலகாரணமாக விளங்கினார்கள். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட பல நூல்கள் மொழி பெயர்க்கபபட்டன. இவ்வாறு மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்ட புதுயுகத்தில் பல இலக்கிய கர்த்தாக்கள் வாழ்ந்து இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு மூல காரணமாக அமைந்தார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
ஜரோப்பாவில் மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப் பட்ட புதுயுகத்தில்
கட்டடம், ஓவியம், சிற்பம் போன்ற கலைத் துறைகளும் சிறப்பான வளர்ச்சியினைப் பெற்றிருந்தன. மறுமலர்ச்சியின் பின்னர் கிரேக்க, உரோம கட்டடக் கலைக்கென்றே ஒரு தனியான மரபு தோற்றுவிக்கப் பட்டது. இக்காலத்தில் அரைக்கோள வடிவிலான வளைவுகளையுடைய கட்டடங்களையும் அதிகம் காணமுடிகிறது. உரோமாபுரியின் புனித பீற்றர் தேவாலயம் கிரேக்க, உரோம கட்டடக் கலை மரபில் உருவாக்கப்பட்ட கட்டடத்திற்கு தக்க சான்றாகும். இத்தேவாலயம் ஒரே நேரத்தில் எண்பதாயிரம் பேர் வழிபாடு செய்யக் கூடிய வகையில் உயர் தொழில்நுட்பம் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளது.
மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப் பட்ட புதுயுகத்தில் ஓவியக்கலையானது சிறப்பான வளர்ச்சியினைப் பெற்றிருந்தது. இக்காலத்தில் ஓவியர்கள் இயற்கைக்கு முன்னுரிமை கொடுத்து புலனுகர்ச்சியை முதன்மைப்படுத்தி ஓவியங்களை தத்துரூபமாக வரைந்தார்கள். இக்காலத்தில் இத்தாலியின் புளோரன்ஸ் நகரம் ஓவியக்கலையின் தனித்துவமான மையமாக் காணப்பட்டது.
மறுமலர்ச்சியின் பின்னரான புதுயுகத்தில் 'லியனாடோடாவின்ஸி' தலைசிறந்த ஓவியராக விளங்கினார். மோனாலிஸா, இறுதி இராப்போசன விருந்து, கன்னிப் பாறைகள் போன்ற இவரது ஓவியப் படைப்புக்கள் அழியாப்புகழ் பெற்றவையாகும். லியனாடோ டாவின்ஸி வைபிளின் காட்சிகளை வஸ்த்திகான் சிஸ்சின் தேவாலயத்தில் வரைந்தார். இரண்டாம் ஜூலியஸ் பாப்பாண்டவரின் அனுசரணையின் கீழ் உரோமாபுரியின் சிஸ்டைன் தேவாலயத்தில் 'மைக்கல் ஏஞ்சலோ' வரைந்த ஓவியங்கள் ஓவியக் கலையின் மகத்துவத்தை சுட்டி நிற்கின்றன. அத்துடன் 'ஜியாரோ' என்பவரின் குகை ஓவியங்கள் அப்பாவிகளைப் படுகொலை செய்யும் காட்சியை வனப்புறச் சித்திரிக்கின்றது. இக்காலத்தில் ஓவியங்களை வரைந்தவர்களிற்கு மானியம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மறுமலர்ச்சியின் பின்னரான புதுயுகத்தில் சிற்பக்கலையினுடைய வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 'லியனாடோ டாவின்ஸி' ஓவியராக மட்டுமின்றி தலைசிறந்த சிற்பக்கலைஞராகவும் திகழ்ந்து பல சிற்பங்களையும் செதுக்கியுள்ளார். சான்றாக டாவின்ஸி இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் போன்ற தலைசிறந்த சிற்பங்களை வடித்தார். அத்துடன் லொறன்ரோவிலுள்ள மெட்சி சிலை, உரோம் நகரின் பேதுறு தேவாலய பீற்றர் சிலை, புளோரன்சிலுள்ள டேவிட் அரசன் சிலை போன்ற சிற்பங்கள் மறுமலர்ச்சிக் கால சிற்பக்கலையின் உயர் நுட்பத்தை எடுத்துக் காட்டுகின்றன. இவற்றினூடாக மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பாவில் கட்டடம், ஓவியம், சிற்பம். போன்ற கலைகளும் சிறப்பான வளர்ச்சியினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கன.
மேற் குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் தொகுத்து நோக்குகின்ற போது மறுமலர்ச்சியானது ஜரோப்பிய வரலாற்றில் அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், சமயம், தத்துவம், கல்வி, இலக்கியம், கலைகள் போன்ற பல்துறைகளிலும் புதுயுகத்தினைத் தோற்றுவித்து ஜரோப்பாவை நவீன யுகத்திற்கு அழைத்துச் சென்றது. என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அறிவியல் ரீதியில் ஆராய்கின்ற போது சமயம் போன்ற துறைகளில் மறுமலர்ச்சியானது புதுயுகத்தினைத் தோற்றுவித்ததென்பது தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது. ஏனெனில் மறுமலர்ச்சியின் பின்னர் மக்கள் மதம் என்ற போர்வைக்குள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதே வெளிப்படை. அதாவது மதகுருமார்களும், பாப்பாண்டவரும் கத்தோலிக்க மதத்தினைக் காரணம் காட்டி மக்களிடமிருந்து வரிகளை வசூலித்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டார்கள். என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இவ்வாறு ஒரு சில காரணங்களை ஆதாரம் காட்டி ஜரோப்பாவில் மறுமலர்ச்சி புதுயுகத்தினைத் தோற்றுவித்தது' என்பதை நிராகரித்து விட முடியாது. ஏனெனில் காலத்திற்குக் காலம் வந்த வரலாற்றாசிரியர்கள் 'ஜரோப்பாவில் மறுமலர்ச்சி புதுயுகத்தினைத் தோற்றுவித்தது' என்னும் கருதுகோளை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே 'மறுமலர்ச்சியானது ஜரோப்பாவில் பல்துறைகளிலும் புதுயுகத்தினைத் தோற்றுவித்தது' என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.