நம்மூருக்கு நீயொரு அமுதசுரபி
வெல்லத் தமிழ்பேச்சு நீ
வேலேந்தும் உயர் பக்தன்
அல்லலை அனுபவித்தும்
அணுவும் அசையா ஆண்சிங்கம்
தொல்லை துயரம் சுமந்தும்
துவழாமனம் படைத்த நெஞ்சம்
கூட்டுறவில் கொடிபிடித்து
குவலயம் வாழ்ந்த குணக்குன்று
நாட்டுறவில் நாட்டம் கொண்டு
நாளும் உழைத்த உழைக்கும் கரம்
பாட்டாளிகளின் கூட்டாளியாய்
பாரினில் பவனிவந்த பால்நிலவு
காட்டாற்று வெள்ளம்போல - நீ
கடலோடு கலந்ததேனாறு
நீறுதரித்த நிலவுமுகம்
நீதானோ நாராயணப்பிள்ளை
ஊறு துளியும் நினையா உயர் உள்ளம்
ஊர்போற்றும் உன்னத தொண்டன்
கூறும் வார்த்தையோ மனம்குளிரும்
கூடலும்ஊடலும் உன் கூடவரும்
பேறுபெற்று பெருந்தொண்டாற்றி
பெருமிதம் கொண்டாயோ கொற்றவனே
கதிர்காம பாதயாத்திரைக்கு
களுவாஞ்சியில் களம் அமைத்த அண்ணல்
பதிபோற்றும் குருதேவர் சீடனாகி
பரிவாக பண்பாக நீயும் உறவாடி
நிதி சேர்த்து நேயமாய் பொருள்சேர்த்து
வதிவிடம் வனப்புற வாழ்ந்த வள்ளலார்
மதிநிறைமகான் குருதேவர் வழியில்
மலர்பாதம் பதித்தாயே யாத்திரையில்
வான்முட்டும் வாட்டமில்லா உன்னுருவம்
நான் கண்டு களிப்புற்ற நல்லதோர் பொன்னுருவம்
தான் எனும் கொள்கைக்கு வேட்டு வைத்து
மேன்மைபெற்ற பெருமகன் நாராயணபிள்ளை
கூனாகிகோலூண்டும் மானிடர்க்கு மதிப்பளித்து
மானாகி மாநிலத்தில் துள்ளி விளையாடி
தேனாகி இனிப்பாயே எல்லோர் நாவினிலும் - நீ
சங்கத்தமிழழகன் சங்கரிமகன் முருகன்
தங்கவடிவேலன் தளராத உயர்பக்தனுக்கு
பங்கமொன்றுவருமோ என்று யாரறிவார்
வங்கமாய் பொங்கிது வாஞ்சி நகரமுமே
மங்களத்தகவல் தாங்கி சென்ற உந்தன்
அமங்களச் செய்திகேட்டு அடியார் கூட்டம்
ஆறாய் விழிகளை ஓடவிட்டோம்
மீளாய் துயரில் நாம் மூழ்கிவிட்டோம்
களுவாஞ்சிகுடி K.சுந்தர்