மட்டக்களப்புக்கு தென்புறமாம் நல்ல மருதமும் நெய்தலும் வாழ்விடமாம் முட்டும் காளைகளாய் களம் இறங்கும் வீரத்தின் விளைநிலமாம் கொட்டும் முரசொலிக்கோமகளாள் எங்கள் உணர்ச்சித்தமிழின் உறைவிடம் களுவாஞ்சியாள் எங்கும் நீர் நிறைகுளங்களும் குமுறும் கடலாறும் வயல் வளங்களும் ஓங்கும் உயர்கல்விக்களஞ்சியமாம், இந்த எழில்மிகு களுவாஞ்சி நகரின் கண்ணே குளக்கரையோரம் கோயில் கொண்டு கண்ணகி அம்மனும் அருளாட்சி செய்கின்றார். அன்னையின் ஆண்டு திருச்சடங்கும் பெருவிழா ஆரம்பமாகி வெகுவிமர்சியாக வீரமாபத்தினியின் விழாக்கோலம் களைகட்டும் நன்நாட்கள் களுவாஞ்சிநகர்கானும் பொன்நாட்களாக பத்தினி தேவியின் பக்திப்பெருவிழா பவனிவர இருக்கிறது.
வைகாசி மாதம் வளர்பிறை காலம் வையகம் ஒருக்கால் வருவேன் என்ற வீரமாபத்தினியினுடைய வீரமும் பக்தியும் சக்தியும் அறிந்து சேரமாமன்னன் செங்குட்டு
வன் இமயமலையில் கல்லெடுத்து கங்கையாற்றில் நீராட்டி வஞ்சிமாநகரில் கண்ணகிக்கு சிலையெடுத்து விழாவெடுத்ததாகவும் இந்த இனிய விழாவுக்கு கடல்சூழ் இலங்கை வேந்தன் கஜவாகும் அழைக்கப்பட்டிருந்ததாகவும் கண்ணகி வழிபாட்டை இலங்கை திருநாட்டிலும் பரப்பவேண்டும் என்ற இனிய எண்ணத்தில் சந்தனமரத்திலே செதுக்கப்பட்ட கண்ணகி அம்மனுடைய சிலைகள் கொடுக்கப்பட்டதாகவும் சிலையெடுத்த சேரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே கஜபாகு மன்னனால் கண்ணகி வழிபாடு இலங்கையிலும் பரப்பப்பட்டது. இது வரலாறு கூறும் உண்மையாகும்.
இதன் அடிப்படையில் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் கண்ணகி வழிபாடு பரவியிருக்கிறது.மட்டுமண்ணுக்கு மணிமகுடம் மாதரசி கண்ணகி வழிபாடு பெண்ணரசியின் அருமை பெருமைகளை நாம் போற்றி புகழுகின்ற பொற்காலம் இந்த வைகாசி மாதம் களுவாஞ்சி நகரம் அன்று காவிரி தவழ்ந்து விளையாடிய பூவிரியும் பொற்சோலைபுகார் நகரம் போன்று சோடனைகளாலும் ஆடல்பாடல்களாலு
ம் விழாக்கோலம் பூண்டிருக்கும். எங்கும் தூய்மை எதிலும் தூய்மைபேணப்படும் மக்கள் மனங்களெல்லாம் மாசற்ற மனங்களாக மாதரசி கண்ணகி அம்மனுடைய பக்திப்பெருவிழாவில் பங்கு பற்றி பத்தினி தேவியின் பாதம்பணிந்து நிற்பார்கள். தீராத நோயை தீர்த்துவைத்த கண்ணகி அம்மனுக்கு நேர்த்திக்கடன்களை அடியார்கள் நிறைவேற்றுகின்ற காட்சி ஓர் கண்கொள்ளாக்காட்சி கண்ணீர்மல்க உடலுருக உளமுருக உருக்கமாக அம்மனின் ஆலயத்தை அவர்கள் வலம் வந்த கொண்டிருப்பார்கள் முட்காவடி, பால்க்காவடி, தூக்குக்காவடி, அங்கபிரதட்சனை, கற்பூரவிளக்கெடுத்தல், மடப்பெட்டி கொடுத்தல் போன்ற புனிதமான செயற்பாடுகள் சிலம்புச்செல்வியின் திருச்சடங்குவிழாவுக்கு பெருமை சேர்க்கும்.
ஆண்டுக்கோர் முறை ஆவணியில் பவனி வருகின்ற ஆயிரம் கண்ணுடையாளுடைய அற்புதபெருவிழா ஆணவம் நிலையற்றது, அநீதி நி
லையற்றது, அதர்மம் நிலையற்றது என்று அறைகூவல் விடுக்கின்ற அன்னையின் வீர உணர்வை இவ்விழா எமக்கு எடுத்து இயம்புவதை காண்கிறோம்.அல்லல்களையும் அவலங்களையும் அகற்றி அன்பு செலுத்துகின்ற அடியார்களை நல்வழிப்படுத்தி நல்வாழ்வு காட்டுகின்ற காப்பியநாயகிக்கு களுவாஞ்சிநகர் கனிவுற எடுக்கின்ற இப்பெருவிழா இப்பிரதேசத்தில் பேசப்படுகின்ற ஒரு உன்னதப் பெருவிழாவாக நடைபெற இருக்கிறது.
உயிர்பிச்சை அளித்த உத்தமிக்கு மாதர்கள் மடிப்பிச்சை மகிழ்வுற எடுத்து மாதரசி கோயிலுக்கு மனம்குளிரக்கொடுத்து மங்கையர் கூடி அங்கயற் கன்னியை வழிபாடு செய்வது வரவேற்கதக்க ஒரு நிகழ்வாகும். கமுகமலரிலே கனிவுற வீற்றிருந்து கமலமலர்சூடி மதிவதனி மகிழ்வு கொண்டு கருணை காட்டும் கற்பரசியின் கால்தொழுது கன்னியர்கள் வணங்குகின்ற கண்கொள்ளாக்காட்சியிலே நாமும் இணைந்து எழிலரசியின் அருளாசி பெற்று மகிழ்வோம். ஆலய திருக்கதவு திறக்கப்படுகின்ற வேளையிலே கண்ணகித்தாயாருடைய அருளாட்சியின் உண்மையும் அன்னையின் அன்பான அரவனைப்பின் வெளிப்பாடும் எமக்கு தெளிவாகின்றது.
கன்னிக்கால்வெட்டுவிழா களுவாஞ்சிநகர் களைகட்டும் பெருவிழா முத்துசப்புற ஊர்வலமும் முத்தமிழ் எனும் இயல் இசை நாடகம் தரும் விருந்துகளும் வானவெடிகளின் வண்ண வண்ண ஜாலங்களும் முழங்களும் காவடி ஆட்டங்களும் காவியப்பாடல்களும் தேவியின் அருள் வேண்டி பூரண பொற்கும்பம்; வைத்து விளக்கேற்றி அன்னையின் வருகையை வரவேற்று அடியார்கள் அம்பாளை தரிசித்து நிற்பார்கள். இந்த இனிய விழாவில் கன்னிக்கால்வெட்டப்பட்டு முத்துச்சப்புறத்திலே ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு கண்ணகியாக நினைத்து அக்காலானது நடப்படும்.
திருக்கல்யாணம் பெருவிழா கண்ணகியாக நடப்பட்டிருக்கும் காலுக்கு சேலைகட்டி தாலிகட்டி கண்ணகிக்கு திருமணம் நடைபெறும். ஒரு திருமண வீட்டில் நடைபெறும் சகல விடயங்களும் இங்கு நடைபெறும் மேள வாத்திய முழக்கங்களும் வாணவெடிகளும் மக்கள் வெள்ளமும் தாலிகட்டுப்பூசைக்கு சிறப்புச்சேர்க்கும்.
திருக்குளிர்த்தி விழா திக்கெல்லாம் தேவியரை வணங்கி வாழ்த்துகின்ற வண்ணத்தமிழ்விழா மாமன்னனிடம் வழக்குரைதத்து சிலம்புடைத்து மார்பு திருகி வீசி மதுரை மாநகரை எரியும் செய்து தணல்சுமத்த கண்ணாள் கண்ணகி கோபமே உருக்கொண்டு நின்ற வேளை இடச்சேரிமக்களும் ஒன்று கூடி வெண்ணெய் தடவி வீரமாபத்தினியின் அகோரம் தணித்து உடல்உளம் குளிரச்செய்த நிகழ்வை பாருக்கு பறைசாற்றும் பக்திபூர்வமான பக்தி பெருவிழா திருக்குளிர்த்தி விழா கண்ணகி அம்மனின் பாடல்களைப்பாடி குளிர்ச்சியூட்டுகின்ற கோலாகலப்பெருவிழா அடியார்கள் புடைசூழ ஆலயத்தில் அழகாக அரங்கேறும் இந்த இனிய விழாவில் நாமும் பங்கு கொண்டு அம்மனின் அருள்பெற்று அகம்மகிழ்வோம். அனைவரும் வாருங்கள் வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி அம்மனின் திருச்சடங்கு பெருவிழாவை சிறப்பிப்பதோடு சிலம்பரசியின் அருளும் ஆசியும் பெற்று பெருவாழ்வுகாண்போம் எனக்கூறி விடைபெற்று கொள்கிறேன்.
களுவாஞ்சிகுடி கை.சுந்தர்
நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம்