காரல் மார்க்ஸ் வாழ்க்கை - ஒரு சிறுகுறிப்பு



பிறப்பு: 05-05-1818.

தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.

தாய்: ஹென்ரிட்டா.

பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி - 664 இலக்கமிட்ட வீடு.

மதம்: யூத மதம்.

சொந்த நாடு: பிரெஞ்சு.

பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.

உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.

தந்தையை பற்றி: சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்.

பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.

பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.

கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)

கல்லூரி வாழ்க்கை: பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.

கல்லூரி இறுதி வாழ்க்கை: தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.

காதல் வாழ்க்கை:

காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.

காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக...

காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

ஜென்னியின் தோற்றம்: ரைன் லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.

காதல் உருவாக்கம்: ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.

ஜென்னி இரசித்த ஆணின் அழகு: அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!!!

மார்க்ஸின் கூற்று: ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.

இரண்டாவது கல்லூரி வாழ்க்கை:

ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது.

ஜென்னியின் காதல்: 

“என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல” மற்றும் “நீ அவனை மறந்து விடு” போன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள் “இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி... ஜென்னி என்றால் காதல்....”

தொழில்: 

பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

திருமண வாழ்க்கை:

ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1. உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.

2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.

தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை... அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை... மன்னிப்பு”!!!

நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.

கம்யுனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.

இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து
ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,

“எல்லா நாடும் என் நாடே!

எல்லா மக்களும் என் மக்கள்!!

நானோர் உலக மகன்!!!”

சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி... ஓரே ஒரு அடி... “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.

இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.

உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.

மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.

இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.

பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.

பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.

மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.

மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.

“யூதனாகப் பிறந்தார்!

கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!

மனிதனாக இறந்தார்!!!

காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்................”.
New Olympic Sports Club Kaluwanchikudy Web Developer

Morbi aliquam fringilla nisl. Pellentesque eleifend condimentum tellus, vel vulputate tortor malesuada sit amet. Aliquam vel vestibulum metus. Aenean ut mi aucto.

தலைவலி


உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபுறமும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும். ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும். ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.

நோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.

1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.

2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.

3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.

4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.

5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவதால் தலைவலி வரலாம்.

6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடையதால் தலைவலி உண்டாகும்.

7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலைவலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.

9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்கவாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.

10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.

மருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.

1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache) 2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension) 3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation) 4. தசைச் சுருக்கம் (Muscle Spasm) 5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache) என மருத்துவர்கள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.

மருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு
நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.

அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்.
New Olympic Sports Club Kaluwanchikudy Web Developer

Morbi aliquam fringilla nisl. Pellentesque eleifend condimentum tellus, vel vulputate tortor malesuada sit amet. Aliquam vel vestibulum metus. Aenean ut mi aucto.

குருதி வகை






இரத்தத்தில் கலந்திருக்கும் சிகப்பு இரத்த அணுக்களின்(RBCs) மேற்பரப்பில் இருக்கும் அல்லது இல்லாதிருக்கும் மரபு உடற் காப்பு ஊக்கிகளை வைத்துக் குருதி வகைப்படுத்தப்படுகிறது.(இதனை, இரத்த பிரிவு என்றும் அழைக்கலாம்) இந்த உடற்காப்பு ஊக்கிகள் புரதமாக, மாவு சத்தாக, இரத்த சர்க்கரை புரதமாக, அல்லது க்ளைகோ லிபிடாக இருக்கலாம். இது ரத்த பிரிவின் அடிப்படையில் ஏற்படக்கூடியது. பல்வேறு திசுக்களில் இருக்கும் வேறு வகையான உயிரணுக்களின் மேற்பரப்பிலும் சில உடற்காப்பு ஊக்கிகள் காணப்படுகின்றன. இரத்த செல்களின் மேற்பரப்பில் காணப்படும் உடற்காப்பு ஊக்கிகளில் பெரும்பாலனவை இரட்டை மரபணுவிலிருந்து (அல்லது நெருக்கமான தொடர்புடைய மரபணுவில் இருந்து)உற்பத்தி ஆகின்றன. இவைகள் அனைத்தும் சேர்ந்து ரத்த பிரிவு அமைப்பை உருவாக்குகின்றன.

இரத்த வகை மரபு வழியாக பெறப்பட்டதாகும்.இது பெற்றோர் இருவரிடமிருந்தும் பெறப்படுகிறது. இன்டர்நேஷனல் சொசைடி ஆப் ப்ளட் ட்ரான்ஸ்ப்யூஷன் (ISBT) மொத்தம் 30 மனித இரத்த பிரிவு அமைப்புகளை அங்கீகரித்து உள்ளது                                   

பல கர்ப்பிணிப் பெண்கள் வேறுவகையான(தன்வகை இரத்தமல்லாத) இரத்த வகையைக் கொண்ட கருவை சுமக்கிறார்கள். இதனால் தாய்மார்களுக்குள் கருவின் RBC க்களை எதிர்த்து போராடக்கூடிய உடற்காப்பு மூலங்கள் உருவாகின்றன. சில சமயங்களில் இந்த தாய்மார்களிடத்தில் உருவாகும் ஒரு சிறிய தடுப்பாற்றல் புரதமானIgG,கருக்கொடிக்கு சென்று கரு RBCக்களை அழித்து இரத்தச் சிகப்பணு சிதைவை உண்டாக்குகின்றது. இதனால்இரத்தச் சிகப்பணு சிதைவு நோய் பிறந்த குழந்தைக்கும் ஏற்பட நேரிடுகின்றது. இந்த நோய் கருவில் இரத்த அணு குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் ஏற்படுகிறது, இது லேசான வீதத்தில் இருந்து மிக கடுமையான வீதம் வரை வேறுபட்டு இருக்கக்கூடுகிறது

இரத்த பொருட்கள்

ஒவ்வொரு இரத்ததானத்தில் இருந்தும் அதிகமான பலன்களை பெறவும் அதன் வாழ்நாளை நீடிக்கவும், இரத்த வங்கிகள் முழுமையாக இருக்கும் இரத்தத்தை சிறு சிறு பகுதிப்பொருட்களாகப் பிரிக்கின்றன . இவற்றில் மிகவும் பொதுவாக கிடைக்க கூடிய பொருட்கள்- RBCக்கள், பிளாஸ்மா, இரத்த வட்டுகள், உறைந்த பிளாஸ்மா, புத்துணர்வுடன் இருக்கும் உறைந்த பிளாஸ்மா (FFP)ஆகியவை பொட்டலமாக
கிடைக்கின்றன. V மற்றும் VIIIஇல் இருக்கும் உறையும் தன்மையை நீட்டித்து வைப்பதற்கு FFP உடனடி-குளிர்பதனம் செய்யப்படுகிறது. இவை இரத்தம் உறைவதில் பிரச்சனை இருக்கும் நோயாளிகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன. இந்த பிரச்சனைகள், கல்லீரல் நோய், இரத்தம் உறையாமல் இருக்க கொடுக்கும் மருந்தை அதிக அளவில் கொடுத்தல், அல்லது இரத்தகுழாய்களுக்குள் பரவலான உறைதல்(DIC) ஆகியவற்றால் நிகழ்கின்றன.
முழுமையாக இருக்கும் இரத்த யூனிட்களில் இருந்து எந்த எவ்வளவு அளவு நீக்க முடியுமா, அவ்வளவு அளவு பிளாஸ்மாவை நீக்கி, சிகப்பு அணுக்கள் எடுக்கப்பட்டு பொட்டலமாக கட்டப்படுகின்றன.
நவீன மீண்டினைப்பு முறைகளை கொண்டு, உறையும் உறையவைக்கும் பொருட்கள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டு ஹீமொபீளியாவை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சேகரிக்கப்பட்ட இரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் பழுதடைவதனால் ஏற்படும் அபாயங்களை குறைக்க முடிகிறது.

சிகப்பு இரத்த அணு பொருத்தம் 

RBC-க்களின் மேற்பரப்பில் AB இரத்த பிரிவினருக்கு A மற்றும் B உடற்காப்பு ஊக்கிகள் இருக்கின்றன. இந்த A மற்றும் B உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக அவர்களது இரத்த ஊநீர் எதுவும் புரிவதில்லை. இதன் விளைவாக, AB இரத்த பிரிவை கொண்ட ஒருவர் அதே இரத்த பிரிவினரிடம் இருந்தும் இரத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்.(AB க்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு). ஆனால் இந்த பிரிவினரால் கொடுக்கப்பட்ட இரத்தம் இதே பிரிவு, அதாவது AB இரத்த பிரிவு கொண்ட ஒருவருக்கு தான் செலுத்த பட வேண்டும்.

  • A இரத்த பிரிவு கொண்ட மனிதர்களின் RBC மேற்பரப்பில் A உடற்காப்பு ஊக்கி இருக்கிறது. இந்த பிரிவின் இரத்த ஊநீர் IgM உடற்காப்பு மூலங்களை B உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக கொண்டுள்ளது. இதனால் A இரத்த பிரிவை கொண்டுள்ள ஒரு நபர் A அல்லது O பிரிவினரிடம் இருந்து தான் இரத்தம் பெற முடியும்.( A வகைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்). இவர்களால் A மற்றும் AB பிரிவினருக்கு இரத்தம் தானம் செய்ய முடியும்.
  • B இரத்த பிரிவு கொண்டிருக்கும் நபர்களின் RBC மேற்பரப்பில் B உடற்காப்பு ஊக்கிகள் இருக்கின்றன. இவர்களில் ஊநீர், A உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான IgM உடற்காப்பு மூலங்களை கொண்டுள்ளது. இதனால், B பிரிவு இரத்தத்தை கொண்டுள்ள ஒருவர் B அல்லது O பிரிவினரிடம் இருந்து இரத்தம் பெற்றுக்கொள்ளலாம்.(B வகைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்). அதே சமயத்தில் இவர்களால் B மற்றும் AB பிரிவனருக்கு இரத்தம் கொடுக்க முடிகிறது.
  • O இரத்த பிரிவு (அல்லது சில நாடுகளில் அழைக்கும் படி இரத்த பிரிவு பூஜ்ஜியம்) கொண்டிருக்கும் நபர்கள் தங்களது RBC மேற்பரப்பில் A மற்றும் B உடற்காப்பு ஊக்கிகளை கொண்டிருப்பதில்லை. ஆனால் இவர்களின் இரத்த ஊநீர் A மற்றும் B இரத்த பிரிவு உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக IgM ஆண்டி-A மற்றும் ஆண்டி-B உடற்காப்பு மூலங்களை கொண்டு உள்ளது. இதன் காரணத்தால் ஒரு O பிரிவு இரத்தத்தை கொண்டுள்ள ஒருவர், மற்றொரு O பிற ஈனரிடம் இருந்துதான் இரத்தத்தை தானமாக பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இவர்களால் எல்லா வகை இரத்த பிரிவினருக்கும் தங்களது இரத்தத்தை தானமாக கொடுக்க முடியும்.(அதாவது A, B, O or AB). மிக அத்தியாவசியமான காலக்கட்டங்களில் எவருக்காவது இரத்தம் தேவைப்படுமானால், அந்த சமயங்களில் இரத்தம் பெற்றுக்கொள்பவரின் பிரிவு என்னவென்று கண்டு பிடிக்க நேரம் அதிகம் ஆகும் பொது, அப்பொழுது O நெகடிவ் பிரிவை நாம் பயன் படுத்திக்கொள்ளலாம்..


சிகப்பு இரத்த அணு பொருத்தத்தின் வாய்ப்பாடு

பெற்றுக்கொள்பவர்[1]தானம் கொடுப்பவர்[1]
O-O+A−A+B−B+AB−AB+
O−Green tickstyle="width:3em"
O+Green tickGreen tick
A-Green tickGreen tick
A+Green tickGreen tickGreen tickGreen tick
B-Green tickGreen tick
B+Green tickGreen tickGreen tickGreen tick
AB−Green tickGreen tickGreen tickGreen tick
AB+Green tickGreen tickGreen tickGreen tickGreen tickGreen tickGreen tickGreen tick
வாய்ப்பாடு குறிப்பு
1. குருக்கினை முறை படி தேர்ந்தெடுக்கும் இரத்தத்தில், சில வித்தியாசமான உடற்காப்பு மூலங்கள் இல்லாததால் அந்த இரத்தம் தானம் கொடுப்பவருக்கும் அதனை பெற்றுக்கொள்பவரின் இரத்தத்திற்கும் பொருத்தம் இல்லாமல் போகச் செய்கிறது.
RhD-நெகடிவ் பிரிவு இரத்தத்தை கொண்டு இருக்கும் ஒரு நோயாளியிடம் ஆண்டி-RhD உடற்காப்பு மூலங்கள் இருப்பதில்லை.(இதற்குமுன்னால் RhD-பாசிடிவ் RBC-க்களுக்கு வெளிபடுத்தபடுவதில்லை) இவர்களால் RhD-பாசிடிவ் இரத்தத்தை ஒரே ஒரு மோரி பெற்றுக்கொள்ள முடியும், ஆனால் RhD உடற்காப்பு மூலங்களுக்கு வெளிப்படுத்தப்படும் ஒரு பெண் நோயாளிக்கு இதனால் ஆபாயங்கள் உண்டாகலாம். அவர் கருத்தரிக்கும் போது அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு ஹெமாளிடிக் நோய் ஏற்படுகிறது. RhD-நெகடிவ் நோயாளியின் உடலில் ஆண்டி-RhD உடற்காப்பு மூலங்கள் உறபத்தியானால், அதன் பிறகு RhD-பாசிடிவ் இரத்தத்திற்கு வெளிப்பட்டு இருக்கும் பொழுது இரத்தம் ஏற்றுவதினால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும். கருத்தரிக்கும் வயதில் இருக்கும் RhD-நெகடிவ் இரத்தத்தை கொண்டுள்ள பெண்களுக்கு கண்டிப்பாக RhD-பாசிடிவ் இரத்தத்தை தரக்கூடாது. அதே போல் RhD உடற்காப்பு மூலங்களை கொண்டுள்ள நோயாளிகளுக்கும் இந்த இரத்தத்தை ஏற்றக்கூடாது. இந்த ஒரு காரணத்திற்காக இரத்த வங்கிகள் பிரத்தியேகமாக ரீசஸ்-நெகடிவ் வகை இரத்தத்தை சேர்த்து பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும். அத்தியாவசியமான நேரங்களில், இரத்த வங்கிகளில் RhD-நெகடிவ் வகை இரத்தம் மிகவும் குறைந்து இருக்கும் சமயங்களில் குழந்தை பிறக்கும் காலக்கட்டத்தை தாண்டிய RhD-நெகடிவ் இரத்த பிரிவை கொண்டுள்ள பெண்களுக்கும் Rh-நெகடிவ் இரத்த பிரிவை கொண்டுள்ள ஆண்களுக்கும் RhD பாசிடிவ் இரத்தம் ஏற்றப்படலாம். ஆனால் இந்த ஆண்களுக்கு ஆண்டி-RhD உடற்காப்பு மூலங்கள் இருக்ககூட்டாது. இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த வங்கிகளில் குறைவாக இருக்கும் RhD-நெகடிவ் வகை இரத்தத்தை சேமித்துகொள்ளலாம். இதன் மருதலைக்கு இது பொருந்தாது; RhD-நெகடிவ் இரத்தத்திற்கு RhD பாசிடிவ் நோயாளிகள் எந்த வித எதிர்விளைவுகளையும் காட்டுவதில்லை

வரலாறு

இரத்த ஏற்றம் தொடர்பாக கார்ல் லாண்ட்ஸ்டேய்னர் என்பவர் மேற்கொண்ட ஆரம்ப கால பரிசோதனைகளின் மூலம் மிக முக்கியமான இரு இரத்த பிரிவு அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 1901 இல் ABO பிரிவும் அலெக்சாண்டர் S. வெய்னருடன் கூட்டு சேர்ந்து 1937 ஆம் ஆண்டில் ரீசஸ் பிரிவும் இவரால் கண்டுபிடிக்கப்பட்டன.1945 இல் கண்டுபிடிக்கப்பட்ட கூம்ப்ஸ் சோதனை,  இரத்த பரிமாற்றம் கண்டறியப்பட்டது, மற்றும் பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் பற்றி அறிந்து கொண்டது ஆகிய யாவும் புதிய புதிய இரத்த வகைகளை கண்டுபிடிக்க உதவியாக இருந்தன. தற்போது 30 மனித இரத்த பிரிவு அமைப்புகள், இன்டர்நேஷனல் சொசைடி ஆப் ப்ளட் ட்ரான்ஸ்ப்யூஷனால் (ISBT) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 30 பிரிவு இரத்த பிரிவுகளுடன்ஏறத்தாழ 600 வித்தியாசமான உடற்காப்பு ஊக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற்றில் பல மிக அரிதானவை. இவைகள் ஒரு சில இனக்குழுக்களில். தடய அறிவியல் மற்றும் பெற்றோர் கண்டறியும் சோதனைகளிலும் இரத்த வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பயன்படுத்தப்படும் இடங்களில் இப்போது முடிவுகளை இன்னும் தெளிவாக தரும் மரபு வழி கைரேகை பதிவு பயன்படுத்தப்படுகின்றது.
New Olympic Sports Club Kaluwanchikudy Web Developer

Morbi aliquam fringilla nisl. Pellentesque eleifend condimentum tellus, vel vulputate tortor malesuada sit amet. Aliquam vel vestibulum metus. Aenean ut mi aucto.

ஜரோப்பாவில் மறுமலர்ச்சி



உலகியல் வரலாற்றிலே ஜரோப்பிய நாகரிகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப் படுகிறது. ஜரோப்பிய நாகரிக வளர்ச்சிக்கு ஆதி மூலமாகவும், அஸ்த்திவாரமாகவும் திகழ்பவை கிரேக்க, உரோம நாகரிகங்களே என்றால் அதனை எவரும் மறுத்து விட முடியாது.  இவ் கிரேக்க, உரோம நாகரிகங்களில் 14ஆம்,15ஆம் நூற்றாண்டுகளில்  பல்துறைகளிலும் ஏற்பட்ட புதிய திருப்புமுனையே மறுமலர்ச்சியாகும்.

           மறுமலர்ச்சி என்பதற்கு அறிஞர்கள் தத்தமது சிந்தனைகளிற்கேற்ப பல்வேறு வரைவிலக்கணங்களை கூறிய போதும் பொதுவாக மறுமலர்ச்சி என்றால் 'மீண்டும் மலர்தல்' 'மறுபிறப்பு' 'புத்துயிர்ப்பு' எனப் பல பொருள்கள் கொள்ளப் படுகின்றன. அதாவது கி.பி 13ஆம் நூற்றாணடின் இறுதிப் பகுதியில் பழமையான கிரேக்க, உரோம கருவூலங்களைக் கற்பதற்கும், அவை தொடர்பாக ஆராய்வதற்கும் அறிஞர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் பயனாக ஜரோப்பிய வரலாற்றில் அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், சமூகம், அறிவியல், கலை, இலக்கியம், எனப் பல்துறைகளிலும் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டு ஜரோப்பாவில் ஒரு புதிய நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது. இதுவே 'மறுமலர்ச்சி' என அழைக்கப்படுகிறது. இவ் மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பிய வரலாற்றில் ஏற்பட்ட புதிய மாற்றங்களை ஆராய்வதே இக்கைநூலின் பிரதான நோக்கமாகும்.
              ஜரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டமைக்கான காரணங்களாக நகரங்களின் செல்வாக்கு, பல்கலைக் கழகங்களின் தோற்றம், அறிவியல் சார்ந்த ஆய்வுகள், வர்த்தகர்களின் தோற்றம், சிலுவை யுத்தம், கடதாசியின் உபயோகம், அச்சியந்திரத்தின் பயன்பாடு போன்ற காரணங்கள் காணப்பட்டாலும் மறுமலர்ச்சி ஏற்பட்டமைக்கான மிகவும் பிரதானமான காரணமாகக் கொள்ளப்படுவது கிழக்கு உரோமப் பேரரசின் வர்த்தக மையமாகக் காணப்பட்ட கொன்ஸ்தாந்தி நோபிள் துறைமுகத்தை ஒட்டோமன் துருக்கியர்கள் 1453ஆம் ஆண்டு கைப்பற்றிக் கொண்டமை எனலாம்.
              அதனால் கிழக்கு உரோமப் பேரரசில் வாழ்ந்த மக்கள் மேற்கு உரோமப் பேரரசிற்கு இடம் பெயர்ந்தார்கள். அப்பொழுது கிறிஸ்தவ கல்விமான்கள் கிழக்கு உரோமப் பேரரசான கொன்ஸ்தாந்தி நோபிள் தலைநகரில் பாதுகாக்கப்பட்டு வந்த கிரேக்க உரோமக் கருவூலங்களை எடுத்துக் கொண்டு மேற்கு ஜரோப்பாவிற்குத் தப்பிச் சென்றனர். அங்கிருந்து கொண்டு அவற்றை ஆராய்ந்து புதிய கருத்துக்கள், கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவற்றை வெளியிட்டார்கள். இதனால் கிரேக்க, உரோம கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு ஜரோப்பாவில் புதுயுகம் தோற்றுவிக்கப்பட்டது.
        ஜரோப்பாவில் 14ஆம், 15ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்க, உரோம நாகரிகங்களில் ஏற்பட்ட மறுமலர்ச்சியானது ஜரோப்பிய வரலாற்றில் பல்துறைகளிலும் புதுயுகத்தினைத் தோற்றுவித்தது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. அதாவது ஜரோப்பிய வரலாற்றில் அரசியல்;, விஞ்ஞானம், சமூகம், அறிவியல், சமயம், கலைகள், இலக்கியம் எனப் பல்துறைகளிலும் மறுமலர்ச்சியானது புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி ஜரோப்பாவை நவீன யுகத்திற்கு அழைத்துச் சென்றது என்றால் அதனை எவரும் மறுத்து விட முடியாது.

          மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பாவின் அரசியல் துறையிலும் பல்வேறு புதிய மாற்றங்கள் உட்புகுத்தப்பட்டன. மத்திய கால ஜரோப்பாவின் அரசியல் நிலையிலிருந்து முற்றுமுழுதாக மாறுபட்ட புதிய சிந்தனைகளைக் கொண்ட அரசியலே மறுமலர்ச்சியின் பின் நிலை பெற்றிருந்தது. அதாவது மத்தியகால ஜரோப்பாவில் நிலவிய பிரபுக்களின் அளவிற்கதிகமான அதிகாரங்கள் குறைக்கப் பட்டு நாட்டின் அதிகாரமானது மன்னனது கைகளிற்குச் சென்றடைந்தது. அதாவது மத்திய மயப்படுத்தப்பட்ட ஆட்சி முறை ஜரோப்பாவில் தோற்றுவிக்கப் பட்டது. குறிப்பாக திருச்சபையினர், பிரதேச ஆட்சியாளர்கள் ஆகியோரின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப் பட்டதோடு மத்தியதரவகுப்பினர்கள் அரசின் உயர் பதவிகளில் நியமிக்கப் பட்டார்கள். இதன் காரணமாக ஜரோப்பிய அரசியலில் உறுதித்தன்மையும், தேசிய ஒற்றுமையும், தேசிய சிந்தனையும் ஊடுருவிக் கொண்டன.
            மத்திய கால நிலமானிய முறையின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து ஜரோப்பாவில் ஸ்பெயின். பிரான்ஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் தேசிய அரசுகளாக எழுச்சி பெற்றன. இத்தேசிய அரசுகளின் வளர்ச்சி மறுமலர்ச்சியினால் ஜரோப்பிய அரசியல் வரலாற்றில் தோற்றுவிக்கப் பட்ட புதிய பரிமாணத்தினையே சுட்டிநிற்கிறது.

           மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பிய அரசியலில் தோற்றுவிக்கப்பட்ட புதுயுகத்தில் நாடுகளின் அரசியல் எல்லைகள் வரையறுக்கப் பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அத்துடன் அரசியலில் பிறப்பு அடிப்படையில் பிரபுக்கள் பெற்றிருந்த உரிமைகள், சலுகைகள் போன்றவை இல்லாதொழிக்கப் பட்டன, ஜரோப்பிய நாடுகளில் தேசியப் படைகள் உருவாக்கப் பட்டு பெரும்பாலான நாடுகளில் ஒரே சட்டம், நீதி முறைகள் கடைப்பிடிக்கப் பட்டன.

  மறுமலர்ச்சியினால் ஏற்படுத்தப்பட்ட புதுயுகத்தில் வர்த்தகத்தினை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் உருவாக்கப் பட்டன. அத்துடன் பிறப்பு அடிப்படையில் சமூக அந்தஸ்த்தை தீர்மானிக்கும் முறை இல்லாதொழிக்கப்பட்டு மத்தியதர வகுப்பினர் அரசியலில் உள்வாங்கப் பட்டனர். முன்னைய காலப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தெய்வீகவுரிமைக் கோட்பாடுகள் தகர்த்தெறியப்பட்டு அரசியலில் புதிய கொள்கைகளும், கோட்பாடுகளும் உட்புகுத்தப்பட்டன. மன்னர்கள் நாடுகாண் பயணங்களிற்கு தங்களால் முடிந்தளவு ஆதரவினை வழங்கியதோடு மக்களது நலன்களைப் பேணும் வகையில் அரசியலை முன்னெடுத்தார்கள். அத்துடன் அவர்கள் பொருளாதாரத் துறையினை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டார்கள்.
   மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பிய வரலாற்றில் தோற்றுவிக்கப்பட்ட புதுயுகத்தில் விஞ்ஞானத் துறையானது பல்வேறு கண்டுபிடிப்புக்களுடன் மாபெரும் வளர்ச்சியினைப் பெற்றுக் கொண்டது. வானவியல் தொடர்பாக ஆராட்சிகளை மேற்கொண்டு விஞ்ஞானிகள் பல புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டார்கள். வானவியலின் தந்தை எனப் போற்றப் படுகின்ற போலந்து நாட்டைச் சேர்ந்த 'நிக்கலஸ் கொப்பர்னிக்கஸ'; என்பவரே நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவர் எனலாம். இவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சான்றாதாரங்களின் வாயிலாக புவியானது தனது அச்சில் கோளவடிவில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் வலம் வருகிறது என்ற புதிய கோட்பாட்டை உலகின் பார்வைக்கு வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றியே வலம் வருகின்றன என்ற கருத்தையும் நிரூபித்துக் காட்டினார்.
                     அவரை அடுத்து வந்த ஜேர்மனியரான ஜோகனர்ஸ் கெப்லர் என்ற விஞ்ஞானி அனைத்துக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன. என்பதையும், கிரகங்களிற்கிடையிலான தூரத்தைக் கணக்கிடும் முறையினையும் கணித
சமன்பாடுகளை ஆதாரம் காட்டி நிரூபித்தார். ஜரோப்பாவில் விஞ்ஞானத் துறையின் வளர்ச்சிக்கு 'கலிலியோக்கலிலி' ஆற்றிய சாதனைகளும் அளப்பரியவை. இத்தாலிய நாட்டவரும், கணிதவியல் பேராசிரியருமான இவர் தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் வானில் உள்ள பொருட்களை அவதானித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டார். குறிப்பாக சந்திரனை அவதானித்து அங்கேயும் புவியைப் போல மலைகள், சிகரங்கள் காணப்படுகின்றன. என்பதை எடுத்துக்காட்டினார். கலிலியோக்கலிலி தெரிவித்த கருத்துக்களை இத்தாலியின் 'நியாயசபை' வன்மையாகக் கண்டித்ததுடன் அவரை நாடுகடத்தினார்கள். இதன் பின்னர்தான் அவரை உலகம் அறியத் தலைப்பட்டது. அவர் உலகியல் வரலாற்றில் 'விஞ்ஞானப் பரீட்சார்த்தங்களின் பிதா' எனச் சிறப்பிக்கப் படுகிறார்.

            உலகியல் வரலாற்றில் விஞ்ஞானத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவராக 'சேர் ஜசாக் நியூட்டன'; விளங்குகின்றார். அவர் 'நியூட்டனின் விதி' என்ற கோட்பாட்டினூடாக விஞ்ஞான வளச்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தார். அவர் அப்பிள் பழத்தை வைத்து நடத்திய பரிசோதனை மூலம் ஈர்ப்பு விசை குறித்த விஞ்ஞானக் கருத்தை முன்வைத்தார். இவரது நியூட்டனின் விதியின் பிரகாரம் பொருட்கள் ஒன்றில் அசைவற்றனவாகவோ, அல்லது சமனான வேகத்தில் அசைந்து கொண்டோ இருக்கும் எனவும் குறிப்பிட்டதுடன்;  இத்தன்மையினை சக்தியைப் பிரயோகித்து மாற்றியமைக்க முடியும் என்னும் கருத்தினையும் வெளியிட்டார். அவர் எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனான மறு தாக்கம் உண்டு என்பதையும் செய்முறை வழியாக நிரூபித்துக் காட்டினார். அத்துடன் வானவில்லில் ஏழு நிறங்கள் உண்டு என்பதையும், கண்ணாடி ஒன்றின் மீது ஒளி செலுத்தப்படும் போது அது தெறித்து வளைந்து செல்லும் போன்ற அறிவியல் கருத்துக்களை உலகின் பார்வைக்கு வெளிக் கொணர்ந்தார்.

          மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்ட புது யுகத்திலே விஞ்ஞானத்தின் ஒரு பாகமான மருத்துவத் துறையும் சிறப்பான வளர்ச்சியினைத் தழுவிக் கொண்டது. சுவீஸ் நாட்டைச் சேர்ந்த சரசல் பஸஸ் ஸ்பானியாவைச் சேர்ந்த மைக்கல் சர்வேஸஸ்;, ஆங்கிலேயரான வில்லியம் ஹார்வே ஆகியோர் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு அரும் தொண்டாற்றினார்கள். இவர்கள் மூவரினாலும் இத்தாலியின் பாதுவா பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உலகப்புகழ் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 'சரசல் பஸஸ்'; என்ற விஞ்ஞானி மனிதனின் நாடித்துடிப்பை அவதானித்து மனிதனுக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் முறையைத் தோற்றுவித்தார். 'மைக்கல் சர்வேஸஸ்' என்பவர் மனிதனுடைய குருதி சுத்திகரிக்கப்படும் முக்கிய தளம் நுரையீரலே என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தினார். 'வில்லியம் ஹார்வே' என்ற விஞ்ஞானி இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் பற்றிய கருத்தினை முதன்முதலில் முன்வைத்தார்.

             ஜேர்மனியரான 'ஜோகேன்ஸ் குற்றம்பேர்க்' என்ற விஞ்ஞானி அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அச்சியந்திரத்தின் மூலம் மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மற்றும், புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிவியல் சார்ந்த ஆராட்சி முடிவுகள் போன்றவற்றையும் மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அச்சியந்திரத்தின் கண்டுபிடிப்பு துணைபுரிந்தது. அந்த வகையில் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டதுடன் அவற்றை மக்கள் மத்தியில் நூல் வடிவில் பரப்பினார்கள். இதனால் மக்களிடையே அறிவியல் சிந்தனைகள் ஊடுருவிக் கொண்டன.

 மேற் கூறப்பட்ட கருத்துக்களை நோக்குகின்ற போது மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பிய வரலாற்றில் தோற்றுவிக்கப்பட்ட புதுயுகத்தில் விஞ்ஞான வளர்ச்சியும் குறிப்பிடத் தக்கதோர் அம்சமாகும்.
  மறுமலர்ச்சியானது ஜரோப்பிய வரலாற்றில் பொருளாதாரத்திலும் புதுயுகத்தினைத் தோற்றுவித்தது. அதாவது 1453 ஆம் ஆண்டு கிழக்கு உரோமப் பேரரசின் தலைநகரான கொன்ஸ்தாந்திநோபிள் துறை முகத்தை ஒட்டோமன் துருக்கியர்கள் கைப்பற்றியதால் ஜரோப்பியர்கள் தமது வர்த்தகப் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அவர்கள் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டு கீழைத்தேய நாடுகளைக் கைப்பற்றினார்கள். அங்கு தமது வர்த்தகப் பொருட்களை விற்பனை செய்ததுடன் அங்கிருந்த மூல வளங்களைப் பெற்றுக்கொண்டு ஜரோப்பாவிற்குச் சென்றார்கள்.  அதனைப் பயன்படுத்தி பல வர்த்தகப் பொருட்களை உற்பத்தி செய்தார்கள். அதனால் வர்த்தகத்துறை பாரிய வளர்ச்சியடைந்தது. ஜரோப்பியர்கள் நாடுகாண் பயணங்களை மேற்கொள்ளும் பொருட்டு கப்பல் கட்டும் தொழிலை விருத்தி செய்தார்கள். அதன் பயனாக கடல்கடந்த வர்த்தகமும் வளர்ச்சியடைந்தது எனலாம்.

            மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பிய பொருளாதாரத்தில் கைத்தொழில் துறையும் வளர்ச்சிபெற்றது. காலணித்துவ நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலதனப் பொருட்களைப் பயன்படுத்தி கைத்தொழில் துறையினை விருத்தியடையச் செய்தார்கள். கைத்தொழிலானது முதலில் இங்கிலாந்திலும் பின்னர் பல ஜரோப்பிய நாடுகளிலும் வளர்ச்சிபெற்றது.
          கைத்தொழில் வளர்ச்சியின் பயனாக மனிதசக்திக்குப் பதிலாக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு குறுகிய நேரத்தில் கூடிய பொருட்களை உற்பத்தி செய்து அதிக வருமானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அவற்றை வெளிநாடுகளிற்கும் ஏற்றுமதி செய்தார்கள். அதன் பயனாக சர்வதேச வர்த்தகமும் தோற்றுவிக்கப்பட்டது. மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பாவில் தோற்றுவிக்கப்பட்ட புதுயுகத்தில் கைத்தொழில் வளர்ச்சி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

                இக்காலத்தில் வர்த்தக வளர்ச்சியின் காரணமாக வங்கி போன்ற பொருளாதார நிறுவனங்களும், வர்த்தக நகரங்களும் தோற்றம் பெற்றதுடன் பண்டமாற்று முறை வீழ்ச்சியடைந்து ஒரு பொருளின் விலையை தீர்மானிக்கின்ற அலகாக பணம் மாற்றம் பெற்றது. இவ்வாறு பொருளாதார வளர்ச்சியின் மூலம் ஜரோப்பாவில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டது.

 மறுமலர்ச்சியின் விளைவாக மேலும் பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் அறிவியல் முன்னேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்தது. திசைகாட்டும்கருவி,
தொலைநோக்கி, படகு, ஆயுதங்கள் போன்ற கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டன. இக்கருவிகளைப் பயன்படுத்தி நாடுகாண் பயணங்கள் மேற்கொள்ளும் போது கடலிலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்தார்கள். அத்துடன் கடலில் பெரிய மீன் இனங்களால் ஏற்படுத்தப் படும் அச்சுறுத்தல்களையும் இக்கருவிகளின் துணையடன் தடுத்து நிறுத்தினார்கள். இதன் மூலம் கடலில் நாடுகாண் பயணங்களை இலகுவாக மேற்கொண்டு பலநாடுகளைக் கண்டுபிடித்தார்கள். மறுமலர்ச்சியின் விளைவுகளான இக் கண்டுபிடிப்புக்கள் ஜரோப்பிய மக்களிடையே புதுயுகத்தினைத் தோற்றுவித்தது.

                மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பாவில் தோற்றுவிக்கப் பட்ட புதுயுகத்திலே சமயரீதியிலும் பல சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப் பட்டன. மறுமலர்ச்சியின் பின்னர் ஜரோப்பிய மக்களிiயே அறிவியல் சிந்தனைகள் வலுப்பெறத் தொடங்கின. இதன் காரணமாக  கத்தோலிக்க திருச்சபையினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த பாப்பரசரினதும், மதகுருமார்களினதும் ஊழல்கள் கண்டறியப் பட்டன. கத்தோலிக்க திருச்சபையின் நடவடிக்கைகளிற்கு எதிராக புத்திஜீவிகள் பல சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைத்தார்கள். அதற்கு மக்களும் ஆதரவு நல்கினார்கள். இதனால் சமய சீர்திருத்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு கத்தோலிக்க மதகுருமாரின் அளவிற்கதிகமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மக்களை ஆட்சி செய்கின்ற அதிகாரம் மன்னனது கைகளிற்கு திரும்பியது. இதன் அடிப்படையில் பிற்காலத்தில் பல சமயசீர்திருத்த இயக்கங்கள் தோற்றம் பெறவும் மறுமலர்ச்சி காரணமாயிற்று எனலாம்.

              மறுமலர்ச்சியின் காரணத்தால் ஜரோப்பாவில் தத்துவத் துறையும் சிறப்பான வளர்ச்சியினைப் பெற்றுக் கொண்டது. திருச்சபை என்ற ஒரு குறுகிய போர்வைக்குள் முடங்கிக் கிடந்த மக்கள் மறுமலர்ச்சியின் பின்னர் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்திக்கத் தலைப்பட்டனர். தம்மைச் சூழவுள்ள விடயங்களை பரந்த மனத்துடன் நோக்குகின்ற பண்பு அவர்களிடத்து மேலோங்கியிருந்தது. அதனால் எந்த ஒரு விடயத்தையும் ஆய்வு செய்யும் போது ஏன்? ஏதற்கு? எப்படி? போன்ற வினாக்களை ஆதாரமாகக் கொண்டு தர்க்க ரீதியாக ஆய்வகளை நிகழ்த்தினார்கள். இதன்பயனாக ஆய்வுகளின் முடிவுகள் உறுதித் தன்மை கொண்டவையாகவும். தீர்க்கமானவையாகவும் அமைந்தன. இக்காலத்தில் வாழ்ந்த தத்துவ அறிஞர்களான நிக்கலோ மாக்கிய வல்லி, கலிலியோக்கலிலி, லியனாடோ டாவின்சி போன்றவர்களின் பங்கும் தத்துவத் துறையின் வளர்ச்சிக்கு வழிகோலியது. மறுமலர்ச்சியினால் தோற்றம் பெற்ற புதுயுகத்தில் தத்துவத்துறை வளர்ச்சியும் ஓர் குறிப்பிடத்தக்க
 அம்சமாகும்.

             மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றம் பெற்ற புதுயுகத்தில் கல்வித் துறையினுடைய வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கது. கிணற்றுத் தவளைகளாக இருந்த ஜரோப்பியர்கள் மறுமலர்ச்சியின் பின்னர் கடல் தவளைகளாக மாற்றம் பெற்றனர். என்று கூறுவதும் வியப்;பிற்குரியதல்ல. அவர்கள் சுயமாகச் சிந்திக்கவும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப் படுத்தவும், விருப்பமானவற்றைச் செய்யவும் பழகிக் கொண்டார்கள். ஒவ்வொரு மனிதனிடையேயும் காணப்பட்ட குறுகிய சிந்தனையோட்டம் மறுமலர்ச்சியின் பின்னர் செயலிழந்து, அனைத்துச் செயற்பாடுகளையும் பரந்த மனத்துடன் மேற்கொள்ள முற்பட்டார்கள். இதனால் அவர்களது அறிவு விருத்தியடைந்து பல இலக்கியங்களும் தோற்றம் பெற்றன. பிற்காலத்தில் கல்வி வளர்ச்சியடையவும் மறுமலர்ச்சியின் பின்னரான தர்க்கரீதியான சிந்தனையோட்டமே மூலகாரணம் எனவும் குறிப்பிடப் படுகிறது.
              விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களினால் மானிடவியல் கருத்துக்கள் வலுப் பெற்றன. அறிவியல் சிந்தனையும், விஞ்ஞானத்தின் புதிய வளர்ச்சி வேகமும் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டு புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க வழியமைத்துக் கொடுத்தன.

  கல்வி வளர்ச்சியின் பெறுபேறாக ஜரோப்பாவில் பல பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப் பட்டமையும் மறுமலர்ச்சியின் விளைவாகவே கொள்ளப்படுகின்றது. நகரங்களிலும், கோயில்களிலும் நிறுவப் பட்டிருந்த பள்ளிகள் விசாலமடைந்து பல்கலைக் கழகங்களாக வளர்ந்தோங்கின. சமுதாயத்தில் மக்கள் சிறந்த முறையில் வாழ முனைந்தார்கள். நாடோடி வாழ்வில் கண்ட சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையையும் நாகரிக வாழ்வில் பொருள் வளத்திற்கேற்ப உருவாக்குவதே கல்விப் பணியாயிற்று. இத்தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல்கலைக் கழகங்களின் தோற்றம் தவிர்க்க முடியாததாயிற்று. இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களாக இங்கிலாந்தில் ஒகஸ்;வேர்ட் பல்கலைக் கழகம், பிரான்சில் பாரிஸ் பல்கலைக் கழகம், இத்தாலியில் நேபிள் பல்கலைக் கழகம், மற்றும் கேம்பிரிஜ் பல்கலைக் கழகம், பொலக்னா பல்கலைக் கழகம், பாதுவா பல்கலைக் கழகம், பிராங் பல்கலைக் கழகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

          மறுமலர்ச்சியினால் தோற்றுவிக்கப்கட்ட புதுயுகத்தில் இலக்கியங்களின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். நாடகம், தத்துவம் போன்ற துறைகளில் பல இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டன. டான்ரே, பிரான்ஸிஸ் பெற்றா, பொக்காசியோ, நிக்கோலோ மாக்கியவல்லி, இராஸ்மஸ், டி. செர்வாண்டஸ், தோமஸ்மூர், லூடோவிக்கோ, அலிஸ்ரோ ஒலாண்டோ, புரஸ்சோ, ஜாக்கோவோ, சன்னாகரே போன்ற அறிஞர்கள் சிறந்த நூல்கள் பலவற்றைப் படைத்து இலக்கியங்களின் வளர்ச்சிக்கு  வித்திட்டார்கள்.

           இத்தாலிய அறிஞரான 'டான்ரே' மறுமலர்ச்சியின் விடி வெள்ளியாகக் கருதப்படுகிறார். புளோரன்ஸ் நகரைச் சேர்ந்த இவர் ஒரு சிறந்த தத்துவ அறிஞராகும். இவர் பொலக்னா, பாதுவா பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்றார். இவருடைய ஆக்கங்களில் 'தெய்வீக இன்பவியல்' 'டிவைன் கெமடி' போன்ற நூல்கள் சிறப்பிற்குரியன. இத்தாலி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல்கள் பலரதும் வரவேற்பைப் பெற்றன. 'பொத்தாக்' என்பவர் பல நூல்களை இத்தாலிய மொழியில் மொழி பெயர்த்தார். இத்தாலிய உரைநடையின் தந்தை எனச் சிறப்பிக்கப்படுகின்ற 'பொக்காசியோ' என்பவர் நூறு சிறுகதைகளைக் கொண்ட 'டோக்மரா' என்ற கதைத் தொகுதியினை வெளியிட்டார்.

            இத்தாலியின் மறுமலர்ச்சி எழுத்தாளர்; எனச் சிறப்பிக்கப்படுகின்ற 'நிக்கோலோ மாக்கியவல்லி'என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட   'வுர்நு PசுஐNஊநு' என்னும் நூல் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப் படுத்துகிறது. 'இராஸ்மஸ்' என்பவரால் உருவாக்கப் பட்ட 'பொய்மைப் புகழ்ச்சி' என்னும் நூல் திருச்சபையின் ஊழல்களையும், மேல்வகுப்பினரின் தவறுகளையும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகிறது. தலைசிறந்த இலக்கிய அறிஞர்களான லியனாடோ டாவின்ஸி, மைக்கல் அஞ்சலோ போன்றவர்கள் இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு மூலகாரணமாக விளங்கினார்கள். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட பல நூல்கள் மொழி பெயர்க்கபபட்டன. இவ்வாறு மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்ட புதுயுகத்தில் பல இலக்கிய கர்த்தாக்கள் வாழ்ந்து இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு மூல காரணமாக அமைந்தார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

          ஜரோப்பாவில் மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப் பட்ட புதுயுகத்தில்
கட்டடம், ஓவியம், சிற்பம் போன்ற கலைத் துறைகளும் சிறப்பான வளர்ச்சியினைப் பெற்றிருந்தன. மறுமலர்ச்சியின் பின்னர் கிரேக்க, உரோம கட்டடக் கலைக்கென்றே ஒரு தனியான மரபு தோற்றுவிக்கப் பட்டது. இக்காலத்தில் அரைக்கோள வடிவிலான வளைவுகளையுடைய கட்டடங்களையும் அதிகம் காணமுடிகிறது. உரோமாபுரியின் புனித பீற்றர் தேவாலயம் கிரேக்க, உரோம கட்டடக் கலை மரபில் உருவாக்கப்பட்ட கட்டடத்திற்கு தக்க சான்றாகும். இத்தேவாலயம் ஒரே நேரத்தில் எண்பதாயிரம் பேர் வழிபாடு செய்யக் கூடிய வகையில் உயர் தொழில்நுட்பம் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளது.

       மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப் பட்ட புதுயுகத்தில் ஓவியக்கலையானது சிறப்பான வளர்ச்சியினைப் பெற்றிருந்தது. இக்காலத்தில் ஓவியர்கள் இயற்கைக்கு முன்னுரிமை கொடுத்து புலனுகர்ச்சியை முதன்மைப்படுத்தி ஓவியங்களை தத்துரூபமாக வரைந்தார்கள். இக்காலத்தில் இத்தாலியின் புளோரன்ஸ் நகரம் ஓவியக்கலையின் தனித்துவமான மையமாக் காணப்பட்டது.

           மறுமலர்ச்சியின் பின்னரான புதுயுகத்தில் 'லியனாடோடாவின்ஸி' தலைசிறந்த ஓவியராக விளங்கினார். மோனாலிஸா, இறுதி இராப்போசன விருந்து, கன்னிப் பாறைகள் போன்ற இவரது ஓவியப் படைப்புக்கள் அழியாப்புகழ் பெற்றவையாகும். லியனாடோ டாவின்ஸி வைபிளின் காட்சிகளை வஸ்த்திகான் சிஸ்சின் தேவாலயத்தில் வரைந்தார். இரண்டாம் ஜூலியஸ் பாப்பாண்டவரின் அனுசரணையின் கீழ் உரோமாபுரியின் சிஸ்டைன் தேவாலயத்தில் 'மைக்கல் ஏஞ்சலோ' வரைந்த ஓவியங்கள் ஓவியக் கலையின் மகத்துவத்தை சுட்டி நிற்கின்றன. அத்துடன் 'ஜியாரோ' என்பவரின் குகை ஓவியங்கள் அப்பாவிகளைப் படுகொலை செய்யும் காட்சியை வனப்புறச் சித்திரிக்கின்றது. இக்காலத்தில் ஓவியங்களை வரைந்தவர்களிற்கு மானியம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

     மறுமலர்ச்சியின் பின்னரான புதுயுகத்தில் சிற்பக்கலையினுடைய வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 'லியனாடோ டாவின்ஸி' ஓவியராக மட்டுமின்றி தலைசிறந்த சிற்பக்கலைஞராகவும் திகழ்ந்து பல சிற்பங்களையும் செதுக்கியுள்ளார். சான்றாக டாவின்ஸி இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் போன்ற தலைசிறந்த சிற்பங்களை வடித்தார். அத்துடன் லொறன்ரோவிலுள்ள மெட்சி சிலை, உரோம் நகரின் பேதுறு தேவாலய பீற்றர் சிலை, புளோரன்சிலுள்ள டேவிட் அரசன் சிலை போன்ற சிற்பங்கள் மறுமலர்ச்சிக் கால சிற்பக்கலையின் உயர் நுட்பத்தை எடுத்துக் காட்டுகின்றன. இவற்றினூடாக மறுமலர்ச்சியின் விளைவாக ஜரோப்பாவில் கட்டடம், ஓவியம், சிற்பம். போன்ற கலைகளும் சிறப்பான வளர்ச்சியினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கன.

          மேற் குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் தொகுத்து  நோக்குகின்ற போது மறுமலர்ச்சியானது ஜரோப்பிய வரலாற்றில் அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், சமயம், தத்துவம், கல்வி, இலக்கியம், கலைகள் போன்ற பல்துறைகளிலும் புதுயுகத்தினைத் தோற்றுவித்து ஜரோப்பாவை நவீன யுகத்திற்கு அழைத்துச் சென்றது. என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அறிவியல் ரீதியில் ஆராய்கின்ற போது சமயம் போன்ற துறைகளில் மறுமலர்ச்சியானது புதுயுகத்தினைத் தோற்றுவித்ததென்பது தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது. ஏனெனில் மறுமலர்ச்சியின் பின்னர் மக்கள் மதம் என்ற போர்வைக்குள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதே வெளிப்படை. அதாவது மதகுருமார்களும், பாப்பாண்டவரும் கத்தோலிக்க மதத்தினைக் காரணம் காட்டி மக்களிடமிருந்து வரிகளை வசூலித்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டார்கள். என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

          இவ்வாறு ஒரு சில காரணங்களை ஆதாரம் காட்டி ஜரோப்பாவில் மறுமலர்ச்சி புதுயுகத்தினைத் தோற்றுவித்தது' என்பதை நிராகரித்து விட முடியாது. ஏனெனில் காலத்திற்குக் காலம் வந்த வரலாற்றாசிரியர்கள் 'ஜரோப்பாவில் மறுமலர்ச்சி புதுயுகத்தினைத் தோற்றுவித்தது' என்னும் கருதுகோளை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே 'மறுமலர்ச்சியானது ஜரோப்பாவில் பல்துறைகளிலும் புதுயுகத்தினைத் தோற்றுவித்தது'  என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
New Olympic Sports Club Kaluwanchikudy Web Developer

Morbi aliquam fringilla nisl. Pellentesque eleifend condimentum tellus, vel vulputate tortor malesuada sit amet. Aliquam vel vestibulum metus. Aenean ut mi aucto.